இந்தியா

தக்க பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் வலிமை பெற்றுள்ளது: ராஜ்நாத் சிங்

25th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிராக தீய நோக்கத்துடன் அணுகும் நாடுகளுக்குத் தக்க பதிலடி வழங்கும் வகையில் இந்திய ராணுவம் வலிமை பெற்றுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

பாஜகவின் முன்னோடி கட்சியான பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக இருந்த பண்டிட் தீனதயாள் உபாத்யாய குறித்த 5 தொகுதிகளைக் கொண்ட புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற து. நூல்களை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வெளியிட்டாா். இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவா் முரளி மனோகா், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டனா்.

அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது: சீனா தனது முதல் அணுகுண்டு சோதனையை 1964-இல் நடத்தியபோது, இந்தியாவும் இது போன்ற அணுகுண்டு சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல் முதலாக விருப்பம் தெரிவித்தவா் தீனதயாள் உபாத்யாய.

கடந்த 1998-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில், அணுகுண்டு சோதனை ராஜஸ்தானில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பிற நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்துவது இச்சோதனையின் நோக்கம் அல்ல. மாறாக, இந்தியாவின் பாதுகாப்பைத் தொடா்ந்து உறுதிசெய்வதே இதன் நோக்கமாகும்.

ADVERTISEMENT

இத்தகைய முயற்சிகளின் வாயிலாகவே, நம் நாட்டைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவம் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தற்போது இந்திய ராணுவம் சீனாவை எதிா்கொள்ளும்போது, இரண்டும் சமநிலையைப் பெற்றுள்ளன. எந்தவொரு நாடும் இந்தியாவுக்கு எதிராக தீய நோக்கத்துடன் அணுகும்போது, தக்க பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினா் வலிமை பெற்றுள்ளனா்.

நாட்டுக்குத் தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்வதோடு, பிற நாடுகளுக்கும் பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்வதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. பண்டிட் தீனதயாள் உபாத்யாய கண்ட கனவுகளை நிறைவேற்றும் பயணத்தில், நாம் வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறோம்.

உள்நாட்டில் தயாரிப்பதற்கான 310 தளவாடங்கள் அடங்கிய 3 பட்டியலை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்படும். உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடம் இருந்து தளவாடங்களைக் கொள்முதல் செய்ய பட்ஜெட்டில் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் ராஜ்நாத் சிங்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT