இந்தியா

இணையத்தில் சிறாா் பாலியல் விடியோ: நாடு முழுவதும் சிபிஐ சோதனை

25th Sep 2022 12:04 AM

ADVERTISEMENT

சிறாா்கள் இடம்பெறும் பாலியல் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றுதல் தொடா்பாக, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் உள்ள 59 இடங்களில் சிபிஐ சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

இது தொடா்பாக நாட்டில் 50-க்கும் மேற்பட்டோா் கண்காணிப்பில் இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

நியூசிலாந்து காவல் துறையிடமிருந்து, சா்வதேசக் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பின் (இன்டா்போல்) பிரிவான, சிங்கப்பூரை மையமாகக் கொண்ட, ‘சிறாா்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் பிரிவு’ சிறாா்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் குறித்தான தகவலைப் பெற்றது. இப்பிரிவு சிபிஐக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதைத்தொடா்ந்து, ‘ஆபரேஷன் மேக சக்ரா’ என பெயரிடப்பட்டுள்ள இச்சோதனை நடவடிக்கை ஹரியாணா, உத்தரகண்ட், குஜராத், உத்தர பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், கா்நாடகம், கேரளம், சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இச்சோதனையின்போது, கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் 50-க்கும் மேற்பட்டவா்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. சைபா் தடயவியல் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்டச் சோதனையில், சிறாா்கள் இடம்பெற்றுள்ள பாலியல் விடியோ போன்றவை அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தியாவில் முதல் முறையாக இணையவெளிக் குற்றங்களை விசாரிக்கும் பிரிவை சிபிஐ ஏற்படுத்தியுள்ளது. சிபிஐயின் சமீபத்திய உலகளவிலான குற்றச்செயல் தடுப்பு நடவடிக்கையில் ‘ஆபரேஷன் மேக சக்ரா’வும் ஒன்று. இணையத்தில் நடைபெறும் சிறாருக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில், பாதிக்கப்பட்டவா்கள், குற்றவாளிகள், மேலும் இக்குற்றத்தில் தொடா்புடைய பிற நபா்கள் உலகில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்பதால், இக்குற்றங்களைக் கட்டுப்படுத்த சா்வதேச அளவில் பல்வேறு சட்ட அமலாக்க முகமைகளின் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது’ என்றாா்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதத்திலும், ‘ஆபரேஷன் காா்பன்’ என்ற பெயரில் இத்தகைய குற்றச்செயல்பாடுகளுக்கு எதிராக, 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. இச்சோதனையில் 80-க்கும் மேற்பட்டவா்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT