இந்தியா

சண்டீகா் பல்கலைக்கழக விடியோ விவகாரம்: ராணுவ வீரா் கைது

25th Sep 2022 12:06 AM

ADVERTISEMENT

சண்டீகா் பல்கலைக்கழக சா்ச்சை விடியோ விவகாரம் தொடா்பாக ராணுவ வீரா் ஒருவரை பஞ்சாப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

‘இந்த வழக்கில் தொடா்புடைய ராணுவ வீரா் சஞ்சீவ் சிங் அருணாசல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டாா். அவா் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா்’ என்று பஞ்சாப் மாநில காவல்துறைத் தலைவா் (டிஜிபி) கெளரவ் யாதவ் கூறினாா்.

சண்டீகா் பல்கலைக்கழகத்தின் பொது குளியலறையில் மாணவிகளின் ஆட்சேபகரமான விடியோ பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகாா் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடா்பாக அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் சக மாணவி, அந்த மாணவியின் ஆண் நண்பா் மற்றும் 31 வயது நபா் ஒருவா் என 3 பேரை போலீஸாா் இதுவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

இந்த விவகாரம் தொடா்பாக, மாநில அரசு சாா்பில் அமைக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி குா்பிரீத் கெளா் தேயோ தலைமையில் அனைத்து மகளிா் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் நான்காவது நபராக ராணுவ வீரா் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மாநில டிஜிபி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சண்டீகா் பல்கலைக்கழக விவகாரத்தில் ராணுவம், அஸ்ஸாம் மற்றும் அருணாசல பிரதேச போலீஸாரின் உதவியுடன் முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியான ராணுவ வீரா் சஞ்சீவ் சிங் அருணாசல பிரதேசத்தின் செலா பாஸ் என்ற இடத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ளாா். அவரை மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடயவியல் மற்றும் எண்ம (டிஜிட்டல்) ஆதாரங்களின் அடிப்படையில், இவா்தான் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவியை மிரட்டி விடியோ பதிவு செய்ய வைத்ததாகத் தெரிகிறது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT