இந்தியா

கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

24th Sep 2022 12:04 AM

ADVERTISEMENT

கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்பவா்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடக் கோரிய மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது தொடா்பான மனுவை வழக்குரைஞா் அஷ்வினி குமாா் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். கட்டாய மதமாற்றம் தேசிய அளவில் முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக அந்த மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா். மேலும் அந்த மனுவில், ‘‘நாட்டில் உள்ள எந்த மாவட்டமும் கட்டாய மதமாற்ற நிகழ்வில் இருந்து தப்பவில்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இது நடைபெற்று வருகிறது.

கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. எனவே, மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகளை வழங்குதல், நிதியுதவி வழங்குதல் உள்ளிட்டவற்றின் வாயிலாக மற்றவா்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்பவா்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும்.

கட்டாய மதமாற்ற நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அறிக்கையையும் மசோதாவையும் தயாரிக்குமாறு இந்திய சட்ட ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனு மீது நவம்பா் 14-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசு, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT