இந்தியா

கான்பூரில் இறந்தவரின் சடலத்தை 18 மாதங்களாக வீட்டிலேயே வைத்திருந்த குடும்பத்தினர்

24th Sep 2022 04:11 PM

ADVERTISEMENT

கான்பூரில் இறந்த வருமான வரித்துறை ஊழியரின் சடலத்தை அவரது குடும்பத்தினர் 18 மாதங்களாக வீட்டிலேயே வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம்
நிகழ்ந்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள ரோஷன் நகர் பகுதியில் இறந்தவரின் சடலம் ஒன்றரை ஆண்டுகளாக வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு நேற்று விரைந்த, சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். சடலம் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் இறந்தவரின் மனைவி மனநிலை சரியில்லாதவர் போன்று தெரிந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். அதேசமயம், சடலம் மம்மி செய்யப்பட்டு, துணியால் இறுக்கமாக மூடப்பட்டிருந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். விசாரணையில், ரோஷன் நகரைச் சேர்ந்த விம்லேஷ் தீட்சித் வருமான வரித் துறையில் பணியாற்றி வந்தார். அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சையின்போது மருத்துவமனையிலேயே பலியானார்.

இதையும் படிக்க- நாளை (செப்.25) சோனியா காந்தியை சந்திக்கும் நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ்

ADVERTISEMENT

இதையடுத்து அவரது இறப்பு சான்றிதழ் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் கோமா நிலையில் இருப்பதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி விம்லேஷ் தீட்சித் சடலத்தை அவரது குடும்பத்தினர் 18 மாதங்களாக வீட்டிலேயே  வைத்திருந்துள்ளனர். கான்பூரில் இறந்த வருவமான வரித்துறை ஊழியரின் சடலத்தை அவரது குடும்பத்தினர் 18 மாதங்களாக வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் அக்கம்பக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT