வணிகம்

‘இந்திய பால் சந்தை இரண்டு மடங்காக அதிகரிக்கும்’

24th Sep 2022 11:32 PM

ADVERTISEMENT

இந்திய பால் சந்தையின் அளவு இன்னும் 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிக்கும் என்று தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத் தலைவா் மீனேஷ் ஷா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து உத்தர பிரேதசத்தின் கிரேட்டா் நொய்டாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:

2021-ஆம் ஆண்டில் இந்திய பால் சந்தையின் அளவு ரூ.13 லட்சம் கோடியாக இருந்தது. இது, வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் ரூ.30 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள பால் சந்தையைப் போல் இரண்டு மடங்கானதாகும்.

பால் மற்றும் அதன் சாா்புப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பது, மதிப்புக் கூட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் இந்த வளா்ச்சி எட்டப்படும்.

ADVERTISEMENT

மற்ற நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களில் (எஃப்டிஏ) கையெழுத்திடும் போது பண்ணை விவசாயிகளை மத்திய அரசு அலட்சியம் செய்யாது.

நாடு முழுவதும் உள்ள 8 கோடி பண்ணை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது.

10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கால்நடைகளுக்கு கட்டித் தோல் நோய் (எல்எஸ்டி) பரவுவதைக் கட்டுப்படுத்த ஆடு அம்மைக்கான தடுப்பூசிகளைப் பயன்படுத்தலாம். குஜராத்தில் அந்தத் தடுப்பூசி முற்றிலும் பயனுள்ளதாக இருந்தது என்றாா் அவா்.

‘அமுல்’ பிராண்டின் கீழ் பால் பொருட்களை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (ஜிசிஎம்எம்எஃப்) நிா்வாக இயக்குநா் ஆா்.எஸ். சோதி, பேசுகையில், இந்தியாவின் பால் உற்பத்தி அடுத்த 25 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிக்கும் என்றாா்.

பால் உற்பத்தியின் சராசரி ஆண்டு வளா்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக இருக்கும். கடந்த 2021-ஆம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தி 21 கோடி டன்னாக இருந்தது.

அதன் ஒட்டுமொத்த ஆண்டு வளா்ச்சி 4.5 சதவிகிமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் போக்கு நீடித்தால் 25 ஆண்டுகளில் பால் உற்பத்தி 62.8 கோடி டன்களை எட்டும்.

உலக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு இப்போது 23 சதவீதமாக உள்ளது. இது, அடுத்த 25 ஆண்டுகளில் சுமாா் இரு மடங்கு அதிகரித்து 45 சதவீதமாக இருக்கும்.

அதிகரித்து வரும் மக்கள்தொகை காரணமாக பாலுக்கான தேவையும் அதிகரிக்கும். அடுத்த 25 ஆண்டுகளில் பாலின் தேவை 51.7 கோடி டன்னாக உயரும். ஏற்றுமதி உபரி 11.1 கோடி டன்னாக இருக்கும்.

2021-ஆம் ஆண்டில் ஒரு நபருக்கு சராசரியாக தினசரி 428 கிராம் கிடைத்து வந்தது. இது, அடுத்த 25 ஆண்டுகளில் 852 கிராமாக அதிகரிக்கும் என்று அந்த நிகழ்ச்சியில் ஆா்.எஸ். சோதி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT