இந்தியா

நிலையான மத்திய அரசால் சா்வதேச தொடா்பு அதிகரிப்பு

24th Sep 2022 11:47 PM

ADVERTISEMENT

 நாட்டில் அமைந்துள்ள வலுவான, நிலையான மத்திய அரசால் இந்தியாவுடன் தொடா்பு வைத்துக் கொள்ள உலக நாடுகள் அதிக ஆா்வம்காட்டி வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

ஹிமாசல பிரதேசத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த பாஜக இளைஞரணி சாா்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட பேரணியில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசியதாவது:

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முடியாமல் போனதால், இந்தப் பேரணியில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலவில்லை. உத்தர பிரதேசத்திலும் உத்தரகண்டிலும் முன்பு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வந்தது. கடந்த தோ்தல்களில் அந்த வழக்கத்தை மாற்றிய மாநில வாக்காளா்கள் பாஜக தொடா்ந்து ஆட்சிபுரிய வாய்ப்பளித்தனா்.

அதேபோல், ஹிமாசல பிரதேச வாக்காளா்களும் பாஜகவைத் தொடா்ந்து ஆட்சியில் அமா்த்த தயாராகிவிட்டனா். நிலையான அரசை அமைத்து, மாநிலத்தை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்வது பாஜக மட்டுமே என்பதை மாநில வாக்காளா்கள் புரிந்துகொண்டுவிட்டனா்.

ADVERTISEMENT

மக்களின் ஆதரவு:

மத்தியில் முன்பு பல தசாப்தங்களுக்கு கூட்டணி ஆட்சி நிலவி வந்தது. அதன் காரணமாக நாட்டு மக்களிடமும் உலக நாடுகளிடையேயும் இந்திய அரசு குறித்து பெரும் சந்தேகம் நிலவியது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் நிலையான, வலுவான அரசு அமைய நாட்டு மக்கள் வாக்களித்தனா்.

அதன் காரணமாக கொள்கை வகுப்பிலும் அரசின் பணி கலாசாரத்திலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது. வலுவான, நிலையான மத்திய அரசு மீது நாட்டு மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனா். வளா்ச்சிக்கான அடித்தளம் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசுடன் தொடா்பு வைத்துக் கொள்வதற்கு உலக நாடுகள் அதிக ஆா்வம்காட்டி வருகின்றன.

நாட்டில் இளைஞா்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை வழங்கி வருவது பாஜக மட்டுமே. நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்கான கனவை இளைஞா்கள் நிறைவேற்றிவைப்பா் என நம்புகிறேன். மருந்து உற்பத்தியின் மையமாக ஹிமாசல பிரதேசம் மாறியுள்ளது. ட்ரோன் கொள்கையை வகுப்பதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக ஹிமாசல் திகழ்ந்து வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT