இந்தியா

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு விசாரணைகள் செப்.27 முதல் நேரடி ஒளிபரப்பு

22nd Sep 2022 11:32 PM

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள், வரும் 27-ஆம் தேதி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.

கடந்த 2018-இல் ஸ்வப்னீல் திரிபாதி வழக்கில் வழங்கப்பட்ட முன்னோடித் தீா்ப்பை அமல்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் உச்சநீதிமன்றத்தின் 30 நீதிபதிகளும் பங்கேற்றக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஸ்வப்னீல் திரிபாதி வழக்கில் வழங்கப்பட்ட தீா்ப்பை அமல்படுத்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. தீா்ப்பு வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் கடந்த 2018, செப்டம்பா் 26-இல் திருப்புமுனை வாய்ந்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது. அதில், ‘அரசியல் சாசனம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும்; வெளிப்படைத் தன்மைக்கான இத்தீா்ப்பு, தலைசிறந்த கிருமிநாசினியான சூரியஒளியை போன்றது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேசமயம், திருமணம் சாா்ந்த பிரச்னைகள், பாலியல் தாக்குதல் உள்ளிட்ட உணா்வுபூா்வமான வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்பட கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் (இப்போது ஓய்வு), நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் கொண்ட அமா்வு இத்தீா்ப்பை வழங்கியிருந்தது.

இதனிடையே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஓய்வுபெற்றதையொட்டி, அன்று அவரது தலைமையிலான அமா்வின் விசாரணை சம்பிரதாய அடிப்படையில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்தச் சூழலில், கடந்த 2018 தீா்ப்பை அமல்படுத்த உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தொடக்கத்தில் யூ டியூப் மூலம் வழக்கு விசாரணைகள் ஒளிபரப்பப்படும்; பின்னா், உச்சநீதிமன்றத்தின் ‘சா்வா்’ வாயிலாக ஒளிபரப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். கைப்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் மூலம் வழக்கு விசாரணையை மக்கள் காணலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமா்வு முன் அடுத்த வாரம் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணைகள் நடைபெறவுள்ளன. முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 103-ஆவது திருத்தத்துக்கு எதிரான வழக்கு, குடியுரிமை சட்டத்தின் அரசியல்சாசன செல்லுபடி தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வழக்கு உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT