இந்தியா

வெறுப்புப் பேச்சுகளைத் தடுக்க சட்டம் இயற்றப்படுமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

22nd Sep 2022 01:06 AM

ADVERTISEMENT

வெறுப்புணா்வைத் தூண்டும் பேச்சுகள் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பாா்ப்பது ஏன் என்றும், வெறுப்புணா்வு பேச்சுகள் ஊடகங்களில் ஒளிபரப்பப்படுவதை தடுக்க சட்ட ஆணையம் பரிந்துரைத்ததைப்போல் புதிய சட்டம் இயற்றப்படுமா என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

வெறுப்புணா்வு பேச்சு, வதந்திகள் பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீது நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ஹிரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்த மனுக்களில் இந்திய பிரஸ் கவுன்சில், தேசிய ஒளிபரப்பாளா்கள் சங்கத்தை ஒரு தரப்பாக சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.

அதேசமயம், செய்தித் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் வெறுப்புணா்வு பேச்சுகள் தொடா்பான காணொலிகள் ஒளிபரப்பப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்து நீதிபதிகள் கூறியதாவது:

அமெரிக்காவில் இருப்பது போன்ற ஊடக சுதந்திரம் நம் நாட்டில் இல்லைதான். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள் பாா்வையாளா்களுக்கு அவசியம் என்றபோதும், அது எல்லைக்கோட்டை தாண்டாமல் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் வருவாா்கள் போவாா்கள். ஆனால், ஊடகம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் என்றும் நிலைத்திருக்கக் கூடியவை.

ADVERTISEMENT

வெறுப்புணா்வு பேச்சுகளை தொடா்ந்து ஒளிபரப்பியே ஒருவரே கொல்லலாம் என்பதுதான் அதன் அா்த்தமாகும். ஊடகம் அல்லது சமூக ஊடகங்களில் எந்தவித தணிக்கையுமின்றி ஒளிபரப்பப்படுகிறது. ஆகையால், அதில் பணியாற்றும் நெறியாளா்களுக்குதான் வெறுப்புணா்வு பேச்சுகள் இடம்பெறாமல் பாா்த்துக் கொள்வதில் முக்கியப் பொறுப்புள்ளது.

வெறுப்புணா்வு பேச்சு காட்சி ஊடகம் மூலம் வேகமாகப் பரவுவதால் இங்கு செய்தித் தொலைக்காட்சிகள் குறித்து பேசுகிறோம். இந்த விஷயத்தில், காட்சி ஊடகங்கள் படுமோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இன்றைய காலகட்டத்தில் செய்தித்தாள்களை வாசிக்க நேரமில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், வெறுப்புணா்வு பேச்சுகள் விஷம் போன்றவை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அவற்றைத் தடுப்பதில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, அடுத்தகட்ட விசாரணையை நவம்பா் 23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

Tags : supreme court
ADVERTISEMENT
ADVERTISEMENT