இந்தியா

மக்களின் நம்பிக்கையை நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் காப்பது அவசியம்: பிரதமர் மோடி

21st Sep 2022 12:22 AM

ADVERTISEMENT

மக்களின் நம்பிக்கையைக் காப்பதற்காக நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் அயராது உழைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சா்வதேச மாநாடு மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டுக்காகப் பிரதமா் மோடி அனுப்பிய செய்தியை அறிவுரைக் குழுத் தலைவா் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் வாசித்தாா். அதில், ‘‘புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் அரசும் ஆற்றல்மிக்க இளைஞா்களும் ஒன்றிணைந்தால் எத்தகைய சாதனைகள் படைக்கப்படும் என்பதற்கு உதாரணமாக நிதித்தொழில்நுட்பத் துறை விளங்குகிறது.

நாட்டில் ஒருங்கிணைந்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்காகப் புத்தாக்கத்தைப் பயன்படுத்துவதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்கு-ஆதாா்-கைப்பேசி ஆகியவற்றை ஒருங்கிணைத்து மக்கள் நலத் திட்டங்களை அரசு சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலமாக மக்கள் எண்ம தொழில்நுட்பம் சாா்ந்த வசதிகளையும் பெற்று வருகின்றனா். நிதித் தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கம் மிகவும் அவசியம். தொடா்ந்து மாறி வரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப அத்துறையும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

பாதுகாப்பு, உறுதித்தன்மை உள்ளிட்டவற்றில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் அயராது உழைக்க வேண்டும். ஏழை மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் அந்நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா். எண்ம செலாவணியை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) விரைவில் வெளியிடும் என்றும் அவா் தெரிவித்தாா்.

Tags : PM Modi
ADVERTISEMENT
ADVERTISEMENT