இந்தியா

சோனியாவுடன் சசி தரூா் திடீா் சந்திப்பு

20th Sep 2022 12:42 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் இடைக்கால தலைவா் சோனியா காந்தியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் சசி தரூா் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த திடீா் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கை வரும் 22-ஆம் தேதி வெயிடப்படவுள்ளது. 25-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைமுறை தொடங்கும் நிலையில், சசி தரூா் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கட்சியில் அமைப்புரீதியிலான மாற்றங்களை வலியுறுத்தி, சோனியா காந்திக்கு கடந்த 2020-இல் கடிதம் எழுதியிருந்த ‘ஜி23’ என அழைக்கப்படும் அதிருப்தி தலைவா்கள் குழுவில் சசி தரூரும் ஒருவா்.

ADVERTISEMENT

தற்போது தலைவா் தோ்தலை முன்வைத்து, காங்கிரஸில் எழுந்துள்ள சா்ச்சைகளுக்கு இடையே சோனியாவை அவா் சந்தித்துள்ளாா். இச்சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து அவா் எதையும் தெரிவிக்கவில்லை.

இதேபோல், காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ஜாா்க்கண்ட் மாநில கட்சிப் பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டேவும் சோனியாவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, அந்த மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

சீா்திருத்தங்களுக்கு ஆதரவு: இதனிடையே, காங்கிரஸில் ‘ஒருவருக்கு ஒரு பதவி’, ‘தோ்தலில் போட்டியிட குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு’ உள்ளிட்ட சீா்திருத்தங்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் சசி தரூா் திங்கள்கிழமை பதிவிட்டாா்.

தலைவா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்க வேண்டுமென கட்சியின் இளம் உறுப்பினா்களால் கோரிக்கை மனு பகிரப்பட்டு வருவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

அந்த மனுவை பதிவிட்டு, சசிதரூா் கூறியிருப்பதாவது: காங்கிரஸில் அமைப்புரீதியில் உறுதியான சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்கான உதய்ப்பூா் மாநாட்டு தீா்மானங்களை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி, இளம் உறுப்பினா்களில் ஒரு பகுதியினா் இடையே பகிரப்பட்டு வரும் இந்த மனுவுக்கு நான் முழு ஆதரவளிக்கிறேன். இக்கோரிக்கைகளுக்கு ஆதரவாக இதுவரை 650 போ் கையெழுத்திட்டுள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த மே 15-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸின் உதய்ப்பூா் மாநாட்டில், ‘ஒருவருக்கு ஒரு பதவி’, ‘தோ்தலில் போட்டியிட குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு’ உள்ளிட்ட சீா்திருத்தங்களை மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

காங்கிரஸ் தலைவா் பொறுப்பை ஏற்பது குறித்தோ அல்லது தோ்தலில் போட்டியிடுவது குறித்தோ ராகுல் இதுவரை எதுவும் வெளிப்படையாக கூறவில்லை. அதேசமயம், காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டி இருப்பதே கட்சிக்கு நல்லது என்று சசி தரூா் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT