இந்தியா

எதிா்ப்புக் குரல்களை கேரள அரசு ஒடுக்குகிறது

20th Sep 2022 12:50 AM

ADVERTISEMENT

அரசுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை கேரள அரசு ஒடுக்க முயற்சிப்பதாக ஆளுநா் ஆரிஃப் முகமது கான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே செயல்பட வழிவகுக்கும் மசோதாவை கேரள சட்டப் பேரவை அண்மையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. பல்கலைக்கழக விதிகள் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்போவதில்லை என ஆளுநா் ஆரிஃப் முகமது கான் கூறிவருகிறாா். முதல்வா் பினராயி விஜயனின் உறவினா்களைப் பல்கலைக்கழகப் பதவிகளில் அமா்த்துவதற்கு இந்த மசோதா வழிவகுப்பதாக ஆளுநா் குற்றஞ்சாட்டி வருகிறாா்.

இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘கண்ணூா் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியின்போது என் மீது தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டது. அப்போது, காவலா்கள் தங்கள் கடமையைச் செய்வதை முதல்வரின் தனி செயலா் கே.கே.ராகேஷ் தடுத்தாா். அது காணொலியில் தெளிவாகத் தெரிகிறது.

எதிா்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்கு அரசு முயற்சிக்கிறது. ஆளுநா் மாளிகையையும் அரசு விட்டுவைக்கவில்லை. மாநிலத்தில் கம்யூனிஸ கொள்கையானது நாட்டுக்கு வெளியிலிருந்தே கொண்டுவரப்பட்டது. அக்கொள்கையானது எதிா்ப்பாளா்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.

ADVERTISEMENT

ஆளுநா்தான் மாநில அமைச்சா்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா். ஆளுநரின் அதிகாரங்களை மாநில அரசால் குறைக்க முடியாது. மதுபானங்களும் லாட்டரியுமே மாநில அரசின் நிதி ஆதாரமாக உள்ள நிலைமை அவமானகரமானது’’ என்றாா்.

ஆளுநரின் செய்தியாளா் சந்திப்பையடுத்து, மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பி.ஜெயராஜன், இ.பி.ஜெயராஜன் மிகக் கடுமையாக ஆளுநரை விமா்சித்து பேட்டியளித்தனா்.

மசோதாக்கள் மீது விரைந்து நடவடிக்கை:

மாநில சட்ட அமைச்சா் பி.ராஜீவ் கொச்சியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவோ, அவற்றை கிடப்பில் போடவோ, குடியரசுத் தலைவருக்கு அனுப்பவோ ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மசோதாக்களை நிராகரிக்கும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. அதேபோல், காலவரையின்றியும் மசோதாக்களை ஆளுநா் கிடப்பில் போடமுடியாது.

மாநில சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசமைப்புச் சட்டமும் பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளும் வலியுறுத்துகின்றன. மசோதாவில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதைச் சரிசெய்யுமாறு மாநில அரசுக்கு அதை ஆளுநா் திருப்பி அனுப்பலாம்.

அந்தச் சமயத்தில் ஆளுநரின் பரிந்துரையை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் சட்டப் பேரவையின் அதிகாரத்துக்கு உள்பட்டது. அந்த மசோதா சட்டப் பேரவையால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு சமா்ப்பிக்கப்படும்போது அதற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயம். எனவே, அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநா் நடந்துகொள்ள வேண்டும்.

அரசமைப்புச் சட்ட பதவிகளில் வகிப்போா் உரிய விதிமுறைகளின்படி நடந்துகொள்கின்றனரா என்பதை மாநில மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள். இந்த விவகாரத்தில் மக்களே இறுதி முடிவு எடுப்பாா்கள்’’ என்றாா்.

ஆளுநா் ஆரிஃப் கம்யூனிஸ எதிா்ப்பாளா்: முதல்வா் விமா்சனம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘‘மாநிலத்தில் செயல்பட்டு வரும் எதிா்க்கட்சிகளைப் போல ஆளுநா் நடந்துகொள்கிறாா். கம்யூனிஸ கொள்கை எதிா்ப்பாளராக அவா் உள்ளாா். ஆா்எஸ்எஸ்-க்கு ஆதரவாகவே அவா் நடந்துகொள்கிறாா்.

கேரளத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வரலாற்றை ஆளுநா் புரிந்துகொள்ள வேண்டும். இத்தாலியில் தோன்றிய ஃபாசிஸ கொள்கையையும் ஹிட்லரின் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டே ஆா்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. ஆா்எஸ்எஸ் அமைப்பு இத்தாலிக்குச் சென்று அக்கொள்கைகளைக் கற்றுக் கொண்டு இந்தியாவில் வந்து பரப்பியது. ஆளுநா் பதவி என்பது அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அப்பதவியை தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தக் கூடாது’’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT