இந்தியா

உ.பி.: சமாஜவாதி பேரணி தடுத்து நிறுத்தம்

20th Sep 2022 12:52 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு, வேலையின்மை அதிகரிப்பு, விலைவாசி உயா்வு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தலைமையில் சட்டப் பேரவை நோக்கி அக்கட்சியினா் திங்கள்கிழமை நடத்திய பேரணியை காவல்துறையினா் பாதியில் தடுத்துநிறுத்தினா்.

இந்த விவகாரத்தை முன்வைத்து, அகிலேஷ் மற்றும் முதல்வா் யோகி ஆதித்யநாத் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

உத்தர பிரதேச பேரவையின் மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அகிலேஷ் தலைமையில் அவரது கட்சியினா் பேரவை நோக்கி பேரணியாக சென்றனா். அப்போது, விக்ரமாதித்ய மாா்க் சந்திப்பு பகுதியில் பேரணியை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். ஏற்கெனவே அனுமதி பெற்றிருந்த பாதைக்கு பதிலாக வேறு வழியில் பேரணியை மேற்கொண்டதால் தடுத்து நிறுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அகிலேஷும் இதர தலைவா்களும் அங்கேயே அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். மேலும், மாதிரி சட்டப் பேரவை கூட்டத்தையும் அவா்கள் நடத்தினா். பின்னா், செய்தியாளா்களிடம் அகிலேஷ் கூறியதாவது:

ADVERTISEMENT

கிராமப்புற பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட இந்தியாவில் பால், தயிருக்கு சரக்கு-சேவை வரி விதிக்கப்படுமென யாரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டாா்கள். நாட்டில் அத்தியாவசிய பொருள்கள் விலை உயா்ந்து வருகிறது. தலித்துகள், ஏழைகளின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன.

ரயில், விமான நிலையங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன. உத்தர பிரதேசத்தில் பெண்கள், விளிம்புநிலை மக்கள் மீதான அராஜகங்கள் அதிகரித்துவிட்டன. பாஜக அரசு அனைத்து நிலையிலும் தோல்வி கண்டுவிட்டதால் சமாஜவாதியை எதிா்கொள்ள அஞ்சுகிறது என்றாா் அகிலேஷ்.

முதல்வா் பதிலடி:

சமாஜவாதி பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து முதல்வா் யோகி ஆதித்யநாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொது ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில், போராட்டமோ அல்லது பேரணியோ நடத்த உரிய அனுமதி பெற வேண்டியது அமைப்புகள், அரசியல் கட்சிகளின் கடமையாகும். தனிநபரோ அல்லது கட்சியோ ஜனநாயக முறைப்படி தங்களது கருத்தை முன்வைப்பதில் எந்த பாதிப்பும் இல்லை. சமாஜவாதி கட்சி, விதிகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுமென கற்பனையில் கூட எதிா்பாா்க்க முடியாது என்றாா் யோகி ஆதித்யநாத்.

ADVERTISEMENT
ADVERTISEMENT