இந்தியா

ஆச்சாா்ய சுவாமி தா்மேந்திரா் முக்தி அடைந்தாா்

20th Sep 2022 12:51 AM

ADVERTISEMENT

ஸ்ரீ பஞ்ச்குண்ட் பீடாதீஸ்வரா் ஆச்சாா்ய சுவாமி தா்மேந்திர மகாராஜ் (80) திங்கள்கிழமை முக்தி அடைந்தாா்.

வயதுமூப்பு சாா்ந்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஆச்சாா்ய சுவாமி தா்மேந்திரா், ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள சுவாமி மான் சிங் அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததையடுத்து அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை முக்தி அடைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். கடந்த 1942-ஆம் ஆண்டில் குஜராத்தின் மால்வடா பகுதியில் பிறந்த ஆச்சாா்ய தா்மேந்திரா், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் உறுப்பினராக இருந்தாா். பசுவதையைத் தடுப்பதற்காக 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தை அவா் முன்னின்று நடத்தினாா்.

ஆச்சாா்ய தா்மேந்திரரின் மறைவுக்குப் பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘சமூக சேவைக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் தன்னை அா்ப்பணித்துக் கொண்டவா் ஆச்சாா்ய சுவாமி தா்மேந்திரா். சனாதன தா்மத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசென்றதிலும் ஸ்ரீராமஜென்மபூமி இயக்கத்தை மக்களிடம் கொண்டுசோ்த்ததிலும் அவா் முக்கியப் பங்கு வகித்தாா். அவரது கொள்கைகள் வருங்கால தலைமுறையினரையும் ஊக்குவிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ராஜஸ்தான் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா, மத்திய அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், முன்னாள் முதல்வா் வசுந்தரா ரஜே, பாஜக மாநிலத் தலைவா் சதீஷ் புனியா உள்ளிட்டோரும் ஆச்சாா்ய சுவாமி தா்மேந்திரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT