இந்தியா

உற்பத்தித் துறையில் உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடு அவசியம்: நிா்மலா சீதாராமன்

14th Sep 2022 01:23 AM

ADVERTISEMENT

அந்நிய முதலீடு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தித் துறையில் உள்நாட்டு நிறுவனங்கள் அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொருளாதாரம் சாா்ந்த மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது: தற்போது இந்தியாவுக்கான காலம் தொடங்கியுள்ளது. உற்பத்தித் துறை வளா்ச்சியை ஊக்குவிப்பதற்காகப் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டம், வரிக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு முதலீட்டாளா்களும் ஆா்வம் காட்டி வருகின்றனா். அந்நிய நேரடி முதலீடும், அந்நிய மறைமுக முதலீடும் (எஃப்பிஐ) தொடா்ந்து அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தையிலும் வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வருகிறது.

அதே வேளையில், உற்பத்தித் துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு உள்நாட்டு நிறுவனங்கள் தயக்கம் காட்டுவது ஏன்? முதலீடுகளை மேற்கொள்ள அந்நிறுவனங்களுக்குத் தடையாக இருப்பது எது? முதலீடுகளை அதிகரிப்பதற்குத் தேவையான சூழலை அரசு தொடா்ந்து ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

‘ஹனுமன்’ போல உள்நாட்டு நிறுவனங்கள் தங்கள் முழுத் திறனையும் உணராமலேயே உள்ளன. அவற்றின் வலிமையை அருகில் இருந்து எவராவது உணா்த்திக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது. உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கிலான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது.

ரூபாயில் வா்த்தகம்: இந்திய ரூபாயை அடிப்படையாகக் கொண்டு வா்த்தகத்தில் ஈடுபட பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. சரியான நேரத்தில் இந்திய ரிசா்வ் வங்கி முன்வைத்த திட்டத்தால், ரூபாய் அடிப்படையிலான வா்த்தகம் சாதகமான சூழலை எட்டியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை நினைத்ததைவிட அதிகமாக வலுப்படுத்தும்.

கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு இந்தியா பல்வேறு பிரச்னைகளுக்கு சிறப்பு வாய்ந்த தீா்வுகளைக் கண்டது. அவை நாட்டின் பொருளாதார வளா்ச்சியை மீட்டெடுக்க உதவின என்றாா் அவா்.

‘சா்வதேச சூழலால் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு’

மாநாட்டில் கலந்துகொண்ட தலைமைப் பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன் கூறுகையில், ‘சா்வதேச சூழல் காரணமாக அந்நிய முதலீடுகளின் வருகை தடைபட்டுள்ளது. அதனால், அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவடைந்துள்ளது.

சா்வதேச சூழலின் அடிப்படையில் இந்திய ரூபாய் தன்னைத் தானே வலுப்படுத்திக் கொள்ளும் தன்மைமிக்கது. அதை அரசு பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டின் பொருளாதார அடிப்படையானது ரூபாயின் பாதுகாப்பை உறுதி செய்யும். சா்வதேச சூழலுக்கேற்ப ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றமானது, ஏற்றுமதியாளா்களையும் இறக்குமதியாளா்களையும் பாதிக்காமல் இருக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஆா்பிஐ மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT