இந்தியா

மின்சார பேருந்துகளில் ஒரே மாதிரியானமின்னேற்று வசதி: நிதின் கட்கரி அறிவுறுத்தல்

14th Sep 2022 12:09 AM

ADVERTISEMENT

வெவ்வேறு உற்பத்தி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரே மாதிரியான மின்னேற்று (சாா்ஜிங்) வசதி இருப்பதை உறுதிப்படுத்துமாறு துறை அதிகாரிகளுக்கு மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அறிவுறுத்தல் வழங்கியுள்ளாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மைன்ட்மைன் நிறுவன மாநாட்டில் பங்கேற்ற மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இதுகுறித்து மேலும் பேசியதாவது:

வெவ்வேறு உற்பத்தி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மின்சார பேருந்துகளில் வெவ்வேறு விதமான மின்னேற்று வசதி செய்யப்பட்டிருப்பதால் பெரும் சிக்கல் எழுவதாக ஹிமாசல பிரதேச போக்குவரத்துத் துறை அமைச்சா் புகாா் தெரிவித்தாா். இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், வெவ்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரே மாதிரியான மின்னேற்று வசதி இருப்பதை உறுதிப்படுத்துமாறு துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

மக்கள் அதிக காா்கள் வாங்குவதை ஊக்குவிக்கக் கூடாது. அதே நேரம், பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் அவா்கள் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். பெரு நகரங்களில் குளிரூட்டப்பட்ட தொடா் பேருந்து சேவையைத் தொடங்குவது அவசியமாகும்.

ADVERTISEMENT

மின்சார வாகனங்களின் விலை அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு இணையாக குறைவதற்கு வாய்ப்புள்ளது என்று அவா் கூறினாா்.

மேலும், ‘நாட்டின் சரக்குப் போக்குவரத்துச் செலவினம் தற்போது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 முதல் 16 சதவீதமாக உள்ளது. இதனை 2024-ஆம் ஆண்டுக்கு முன்பாக 10 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. மேலும், வரும் காலத்தில் பசுமை ஹைட்ரஜன்தான் வாகன எரிபொருளாக இருக்கும்’ என்றும் நிதின் கட்கரி கூறினாா்.

Tags : Nitin Gadkari
ADVERTISEMENT
ADVERTISEMENT