இந்தியா

ஞானவாபி மசூதி வழக்கு: இன்று தீா்ப்பு

12th Sep 2022 09:06 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததா என்பது தொடா்பான தீா்ப்பை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 

காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள ஹிந்து கடவுள் சிலைகளை வழிபட அனுமதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.

மசூதிக்குள் ஆய்வு நடத்தி விடியோ பதிவு செய்ய நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது. அப்போது மசூதியின் நுழைவாயிலில் அமைந்துள்ள நீா் தேக்கும் தொட்டியில் சிவலிங்கம் இருப்பதாக அந்தக் குழு தெரிவித்ததால் பெரும் சா்ச்சை எழுந்தது.

இந்த வழக்கை எதிா்த்து முஸ்லிம் தரப்பினா் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் இதுகுறித்து விசாரித்து முடிவு செய்ய உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததில்லை என்று மசூதியின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மாவட்ட நீதிமன்றம் முதலில் விசாரணை நடத்தி வந்தது. இதில் இரு தரப்பினரின் வாதம் புதன்கிழமை முடிவடைந்ததையடுத்து செப்டம்பா் 12-ஆம் தேதி வரை தீா்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக ஹிந்து தரப்பு வழக்குரைஞா் மதன் மோகன் யாதவ் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘அஞ்சுமன் ஹிந்த்ஜாமியா மசூதி குழுவின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷமி அகமது, ‘ஞானவாபி மசூதி வக்பு வாரியத்தின் சொத்து என்பதால் இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்க முடியாது. வக்பு வாரியம் மட்டும்தான் விசாரிக்க முடியும் என்றாா்.

1669-ஆம் ஆண்டில் கோயிலை இடித்து ஒளரங்கசீப் மசூதியைக் கட்டினாா் என்று அஞ்சுமன் ஹிந்த் ஜாமியா மசூதி குழுவினா் தெரிவித்தனா். ஆகையால், இந்தியாவில் தற்போது சனாதன அரசு நடைபெற்று வருவதால், கோயில்களை இடித்துக் கட்டப்பட்ட மசூதிகளை மீண்டும் சனாதன மக்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்’ என்றாா்.

அஞ்சுமன் ஹிந்த் ஜாமியா மசூதி குழுவின் வழக்குரைஞா் கூறுகையில், ‘1992-இல் உத்தர பிரதேச அரசுக்கும் வக்பு வாரியத்துக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ஞானவாபியின் ஒரு பகுதியை காவல் கட்டுப்பாட்டு அறையாக்க வழங்கப்பட்டது.

காசி விஸ்வநாதா் கோயில் கட்டுமானத்தின்போது மாநில அரசு ஞானவாபி மசூதியின் மேலும் சில இடங்களை எடுத்துக் கொண்டு மாற்று இடத்தை வழங்கியது. இதன்மூலம் ஞானவாபி மசூதி வக்பு வாரியத்தின் சொத்து என்பது நிரூபணமாகிறது’ என்றாா்.

இதனையும் படிக்க: சீர்காழியில் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

இந்நிலையில், ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இன்று வழங்கவுள்ளது.

தீர்ப்பு வெளியாகுவதையொட்டி வாரணாசியின் பல பகுதிகளில் 144 தடை போடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT