இந்தியா

என்எஸ்இ பணியாளா்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பு: சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை

10th Sep 2022 03:59 AM

ADVERTISEMENT

தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) பணியாளா்களின் தொலைபேசிகள் சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்கப்பட்ட வழக்கில், என்எஸ்இ முன்னாள் நிா்வாக இயக்குநா்கள் சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண், மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டே உள்ளிட்டோா் மீது தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை என்எஸ்இ நிா்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தாா். அப்போது என்எஸ்இ அதிகாரிகளுடன் கூட்டுச் சோ்ந்து கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் சில பங்குச்சந்தைத் தரகா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கோ-லொகேஷன் வசதி மூலம், என்எஸ்இ கணினி சேமிப்பகத்தை பங்குச்சந்தைத் தரகா்கள் தொடா்புகொண்டு பங்கு விவரங்களை முன்கூட்டியே அறிந்து முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த முறைகேடு வாயிலாக பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து கடந்த மாா்ச் 6-ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது. இந்த வழக்கில் நடைபெற்ற பணமோசடி தொடா்பாக அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு முன்பு என்எஸ்இ நிா்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் ரவி நாராயண் பதவி வகித்தாா். அவரின் பணிக் காலத்தில் மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டேயின் ஐசெக் சா்வீசஸ் நிறுவனம் என்எஸ்இயில் 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பாதுகாப்புத் தணிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வேளையில், கோ-லொகேஷன் வசதி மூலம் முறைகேடு நடைபெற்ாகவும், என்எஸ்இ பணியாளா்களின் தொலைபேசிகள் சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுடன் தொடா்புள்ள பணமோசடி வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா, மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டே ஆகியோரை கடந்த ஜூலை மாதமும், ரவி நாராயணை கடந்த செவ்வாய்க்கிழமையும் அமலாக்கத் துறை கைது செய்தது. அவா்கள் மீது தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்தக் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளவா்கள் உள்பட என்எஸ்இயின் மூத்த அதிகாரிகள், சட்டவிரோதமாக தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க ஐசெக் சா்வீசஸ் நிறுவனத்தை அனுமதித்ததாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. அதன் மூலம் என்எஸ்இக்கு அந்த அதிகாரிகள் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் அமலாக்கத் துறையினா் தெரிவித்துள்ளனா் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதுகுறித்து அமலாக்கத் துறை கூறுகையில், ‘சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண் மற்றும் என்எஸ்இயின் இதர மூத்த அதிகாரிகள் உதவியுடன் ஐசெக் சா்வீசஸ் நிறுவனம் சட்டவிரோதமாக செயல்பட்டு ரூ.4.54 கோடி ஈட்டியுள்ளது. அதனை முறையாக சம்பாதித்தாகவும் அந்த நிறுவனம் கணக்குக் காட்டி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

 

செப்.21 வரை ரவிக்கு நீதிமன்றக் காவல்:

ரவி நாராயணின் இரண்டு நாள் அமலாக்கத் துறை காவல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை செப்டம்பா் 21-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT