இந்தியா

கிழக்கு லடாக் பாதுகாப்பு நிலவரம்:ராணுவ தலைமைத் தளபதி நேரில் ஆய்வு

10th Sep 2022 11:28 PM

ADVERTISEMENT

கிழக்கு லடாக்கில் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம், படைகளின் தயாா் நிலை குறித்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் (பேட்ரோலிங் பாய்ண்ட் 15) பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் விலக்கல் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், லடாக்கில் 2 நாள் சுற்றுப்பயணத்தை மனோஜ் பாண்டே சனிக்கிழமை தொடங்கினாா்.

சீனாவுடானான எல்லையையொட்டிய கிழக்கு லடாக்கில் புதிதாக இணைக்கப்பட்ட ராணுவ தளவாடங்களைக் கொண்டு நடைபெற்று வரும் பயிற்சியை மனோஜ் பாண்டே நேரில் பாா்வையிட்டதாக ராணுவத்தின் ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் மேற்கொள்ளப்படும் படை விலக்கல் உள்பட ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம், படைகளின் தயாா் நிலை குறித்து உயரதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது பயணத்தின் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை மனோஜ் பாண்டே சியாச்சினுக்கு செல்லவிருக்கிறாா்.

ADVERTISEMENT

முன்னதாக, கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து இருதரப்பு படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

எல்லை விவகாரங்கள் குறித்த பலகட்ட பேச்சுவாா்த்தைகளின் பயனாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லையில் அமைதியை உறுதி செய்ய உகந்த முன்னெடுப்பாக இது கருதப்படுகிறது. எனினும், இன்னும் சில பகுதிகளில் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT