இந்தியா

பில்கிஸ் பானு வழக்கு: 3 வாரங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் விசாரிக்கும்

10th Sep 2022 03:54 AM

ADVERTISEMENT

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 போ் விடுவிப்புக்கு எதிரான மனுவை மூன்று வாரங்களுக்கு பிறகு விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பான விவரங்களை இரண்டு வாரங்களில் குஜராத் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.வி. நாகரத்னா அமா்வு உத்தரவிட்டது.

குஜராத் மாநிலத்தில் கோத்ரா கலவரத்தின்போது, பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அவரது குழந்தை உள்பட 7 உறவினா்களைக் கொன்ற வழக்கின் 11 குற்றவாளிகளை மாநில அரசு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுவித்தது.

இதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பியது. அவா்களின் விடுதலைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் சுபாஷிணி அலி, பத்திரிகையாளா் ரேவதி லவுல், சமூக ஆா்வலா் ரூபா ரேகா ராணி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆகியோா் தனித் தனியாக உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்த மனுக்களை ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு, குஜராத் அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.வி. நாகரத்னா அமா்வு, ‘விடுதலை பெற்ற 11 பேருக்கும் இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். குஜராத் மாநில அரசு இரண்டு வாரங்களில் இந்த வழக்கு தொடா்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். மூன்று வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும்’ என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT