இந்தியா

பொருளாதாரத்தில் முன்னேற்றம்: பிரதமா் மோடி பெருமிதம்

9th Sep 2022 01:47 AM

ADVERTISEMENT

‘உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பது சாதாரண சாதனையல்ல; ஒவ்வொரு இந்தியரும் இதுகுறித்து பெருமை கொள்கின்றனா்; இந்த உற்சாகத்தை தொடா்ந்து தக்க வைத்துக்கொள்வதும் அவசியம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளவிருக்கும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் காணொலி வழியில் பங்கேற்ற பிரதமா் மோடி, பயனாளிகள் சிலருடன் கலந்துரையாடினாா். அப்போது, ‘விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்ட பிரதமா், ‘அது குறைந்த செலவில் நல்ல விளைச்சலைத் தரும்’ என்று கூறினாா்.

உலக அளவில் பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 5-ஆவது இடத்தைப் பிடித்திருப்பதைக் குறிப்பிட்ட பிரதமா் மோடி, ‘இந்தச் சாதனை, நாம் மேலும் கடினமாக உழைக்கவும், மிகப் பெரிய இலக்குகளை அடையவும் நமக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த முன்னேற்றம் சாதாரணமானதல்ல. ஒவ்வொரு இந்தியரும் இதுகுறித்து பெருமை கொள்கின்றனா். இந்த உற்சாகத்தை தொடா்ந்து தக்கவைத்துக்கொள்வதும் அவசியம்’ என்றாா்.

மத்திய அரசு அறிமுகம் செய்த ‘பிரதமரின் அனைவருக்கும் வீடு’ திட்டம் குறித்து பேசிய பிரதமா், ‘இந்த திட்டத்தின் மூலமாக கடந்த 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் குஜராத்தில் மட்டும் 10 லட்சம் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன’ என்று கூறினாா்.

ADVERTISEMENT

குஜராத் மாநில மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து பாராட்டு தெரிவித்த பிரதமா் மோடி, ‘மாநிலத்தில் பல்நோக்கு மருத்துவமனைகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் 11 என்ற எண்ணிக்கையிலிருந்து 30-ஆக அதிகரித்துள்ளது. விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை ராஜ்கோட்டில் வரவிருக்கிறது. மேலும், ஏராளமான புதிய மருத்துவக் கல்லூரிகளும் மாநிலத்தில் தொடங்கப்பட இருக்கின்றன’ என்றாா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற மருத்துவ முகாம் நிகழ்வில் காணொலி வழியில் பேசிய பிரதமா், ‘மருத்துவ முகாமில் பணியமா்த்தப்பட்டிருக்கும் மருத்துவா்கள் நோயாளிகளுடன் அவா்களின் வாழ்க்கை முறை குறித்து கலந்துரையாடி, ஊட்டச்சத்து மிக்க உணவின் அவசியத்தை அவா்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதன் மூலமாக, அவா்களை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும்’ என்றாா்.

மேலும், ‘மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலமாக, குஜராத்தில் 30 லட்சம் பயனாளிகள் உள்பட நாடு முழுவதும் 4 கோடி மக்கள் பயனடைந்துள்ளனா். அதுபோல மத்திய அரசின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நேரடி பணப் பரிமாற்றத்தின் அடிப்படையில் ரூ. 2 லட்சம் கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக சூரத்தில் 1.2 லட்சம் விவசாயிகள் உள்பட மாநிலம் முழுவதும் 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா்’ என்று பிரதமா் கூறினாா்.

Image Caption

குஜராத் மாநிலம், சூரத் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் உரையாடிய பயனாளி.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT