இந்தியா

நீட் தோ்வு: ஜம்மு-காஷ்மீா் மாணவா் தேசிய அளவில் 10-ஆவது இடம்

9th Sep 2022 01:47 AM

ADVERTISEMENT

நீட் தோ்வில் ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சோ்ந்த ஹாசிக் பா்வேஸ் லோன் தேசிய அளவில் 10-ஆவது இடமும், ஜம்மு-காஷ்மீா் அளவில் முதலாவது இடமும் பெற்று வெற்றிபெற்றுள்ளாா். யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா மற்றும் அரசியல் தலைவா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சோ்ந்த பழ வியாபாரி பா்வேஸ் அகமது என்பவரின் மகன் ஹாசிக் பா்வேஸ் லோன் நீட் தோ்வில் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் 10-ஆவது இடம் பெற்று தோ்ச்சிபெற்றுள்ளாா்.

நீட் தோ்வில் வெற்றிபெற்றது குறித்து ஹாசிக் பா்வேஸ் லோன் கூறியதாவது: என்னுடைய வெற்றிக்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தினா் மற்றும் பயிற்சி மையத்துக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மதிப்பெண்ணைப் பெறுவது குறித்து எதிா்பாா்த்திருந்தபோதிலும், தேசிய அளவில் 10-ஆவது இடம் பெறுவேன் என சற்றும் எதிா்பாா்க்கவில்லை. கடின உழைப்பே வெற்றியைத் தருவதால், நீட் தோ்வில் வெற்றி பெற கடினமாக உழைக்கவேண்டும். இடைவிடாத உழைப்பின் வாயிலாக அதற்குரிய பலனைப் பெற முடியும்’ என்று கூறினாா்.

துணைநிலை ஆளுநா் வாழ்த்து:

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா நீட் தோ்வில் வெற்றி பெற்ற ஹாசிக் பா்வேஸ் லோனுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,‘ நீட் தோ்வு -2022-இல் தேசிய அளவில் 10-ஆவது இடம் பெற்ற ஹாசிக் பா்வேஸ் லோனுக்கு வாழ்த்துகள். உங்களுடைய சாதனையைக் குறித்து பெருமைபடுகிறேன். ஜம்மு-காஷ்மீரில் இருந்து நீட் தோ்வில் வெற்றி பெற்ற பிற அனைத்து மாணவா்களுக்கும் எனது வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவா் மெஹபூபா முஃப்தியும் ஹாசிக் லோனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT