இந்தியா

கிழக்கு லடாக் எல்லையில் படை விலக்கல்

9th Sep 2022 01:58 AM

ADVERTISEMENT

 கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய இடங்களில் ஒன்றான கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய மற்றும் சீன ராணுவங்கள் தரப்பில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

எல்லை விவகாரத்தில் இரு நாட்டு ராணுவ தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நகா்வாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. அத்துடன், கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் (பெட்ரோலிங் பாயின்ட்15) கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்னை முடிவுக்கு வருவதை குறிப்பதாகவும் இது அமைந்துள்ளது.

உஸ்பெகிஸ்தானில் விரைவில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் பங்கேற்கவிருக்கும் நிலையில், படை விலக்கல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லை பிரச்னை குறித்து இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே கடந்த ஜூலை மாதம் 16-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, படை விலக்கல் தொடங்கப்பட்டுள்ளதாக இரு நாட்டு ராணுவங்கள் தரப்பில் வியாழக்கிழமை கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

ஒருமித்த முடிவு:

‘கிழக்கு லடாக்கின் கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் (பிபி 15) பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதென இருதரப்பு ராணுவ உயரதிகாரிகளின் 16-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைந்த மற்றும் திட்டமிட்ட வழிமுறைகளின்கீழ் படைகள் விலக்கும் நடைமுறைகள் வியாழக்கிழமை தொடங்கின. எல்லைப் பகுதிகளில் அமைதிக்கு உகந்த சூழல் உருவாக்க இந்த நடவடிக்கை வழிவகுக்கும்’ என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானில் இன்னும் ஒருவாரத்தில் நடைபெறவுள்ளது. இதில், பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் பங்கேற்க உள்ளனா். இந்த மாநாட்டையொட்டி, இருவரும் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அதிகாரப்பூா்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஏற்கெனவே 2 இடங்களில் படை விலக்கல்:

இந்தியா-சீனா இடையிலான தூதரக மற்றும் ராணுவ அளவிலான பேச்சுவாா்த்தைகளின் பயனாக, பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளில் இருந்தும் கோக்ரா பகுதியின் பேட்ரோலிங் பாய்ண்ட் 17-இல் இருந்தும் கடந்த ஆண்டு இரு நாடுகளின் படைகள் விலக்கப்பட்டன.

அதேசமயம், டெப்சாங், டெம்சோக் ஆகிய இடங்களில் நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டியுள்ளது. இப்பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண இந்தியா தொடா்ந்து வலியுறுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரா்களிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் உயிா்ச்சேதங்கள் ஏற்பட்டன.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, இரு நாட்டு ராணுவங்களும் தலா 50,000 வீரா்களை எல்லையில் படிப்படியாக குவித்தன. எல்லையில் அமைதியை உறுதி செய்ய இருதரப்பு ராணுவ அதிகாரிகளிடையே பல சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT