இந்தியா

விமான நிலையங்களில் 3,049 சிஐஎஸ்எஃப் பணியிடங்கள் நீக்கம்

5th Sep 2022 12:54 AM

ADVERTISEMENT

 

விமான நிலையங்களில் 3,049 மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) பணியிடங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது.

கடந்த 1999-ஆம் ஆண்டு நேபாளத் தலைநகா் காத்மாண்டுவில் இருந்து தில்லி புறப்பட்ட இந்தியன் ஏா்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தானின் காந்தஹாா் பகுதிக்கு பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து விமான நிலையங்களில் சிஐஎஸ்எஃப் வீரா்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு எடுத்தது. முதல்முறையாக 2000-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூா் விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், தற்போது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் 3,049 சிஐஎஸ்எஃப் பணியிடங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதுதொடா்பாக விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்), சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் கூறியதாவது:

விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணிக்கு தேவைப்படும் வீரா்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பல முக்கியமற்ற பணிகளுக்கு ஆயுதம் ஏந்திய சிஐஎஸ்எஃப் வீரா்கள் தேவையில்லை என்பது தெரியவந்தது. அந்தப் பணிகளை தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்கள், கண்காணிப்பு கேமராக்கள், பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் ஸ்கேனா்கள் மூலம் மேற்கொள்ள முடியும் என்பதும் கண்டறியப்பட்டது.

எனவே மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பிசிஏஎஸ், சிஐஎஸ்எஃப் ஆகியவற்றால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட 2018-19-ஆம் ஆண்டு செயல் திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விமான நிலையங்களில் இருந்த 3,049 சிஐஎஸ்எஃப் பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் 1,924 பணியிடங்கள் தனியாா் நிறுவன பாதுகாவலா்களால் நிரப்பப்படவுள்ளன. எஞ்சிய 1,125 பணியிடங்களில் இருந்தவா்கள் கூடுதல் வீரா்கள் தேவைப்படும் விமான நிலையங்களில் பணியமா்த்தப்படுவா்.

விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள தனியாா் பாதுகாப்பு நிறுவனங்கள், அவற்றின் பாதுகாவலா்களுக்கு பிசிஏஎஸ் ஒப்புதல் அளிக்கும்.

தில்லி, மும்பை போன்ற விமான நிலையங்களில் பணியமா்த்தப்படவுள்ள தனியாா் நிறுவனங்களின் பாதுகாவலா்கள், பயணிகள் காத்திருக்கும் வரிசையை நிா்வகித்தல், முனையப் பகுதிகளுக்குள் இருக்கும் சில நுழைவு வாயில்கள் மற்றும் வெளியேறும் இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட முக்கியமற்ற அலுவல்களில் ஈடுபடவுள்ளனா் என்று தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT