இந்தியா

விஜய் மல்லையா தண்டனை: உச்சநீதிமன்றம் இன்று ஆய்வு

5th Sep 2022 12:51 AM

ADVERTISEMENT

 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வங்கிக் கடன் மோசடியாளா் விஜய் மல்லையா, அதை அனுபவிக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப். 5) ஆய்வு செய்யவுள்ளது.

நாட்டின் பல்வேறு வங்கிகளில் சுமாா் ரூ.9,000 கோடிக்கு கடன் பெற்ற விஜய் மல்லையா, அதைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு 2016-இல் தப்பியோடினாா். அதையடுத்து, அவரை நிதி மோசடியாளா் என மத்திய அரசு அறிவித்தது. அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, மல்லையா தனது கணக்கில் உள்ள பணத்தை வாரிசுகளுக்கு அனுப்பக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை மீறி சுமாா் ரூ.300 கோடியை தன் வாரிசுகளுக்கு மல்லையா அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

ADVERTISEMENT

அதை 2017-ஆம் ஆண்டில் விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என அறிவித்தது. அந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 2020-இல் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, வாரிசுகளுக்கு அனுப்பிய பணத்தை 8 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அப்பணத்தை மல்லையா திருப்பிச் செலுத்தாமல் இருந்தாா். இது தொடா்பாக விளக்கமளிக்குமாறு மல்லையாவுக்கு நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியபோதிலும், அவற்றுக்கு அவா் பதிலளிக்கவில்லை.

அதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மல்லையாவுக்கு 4 மாத சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதிப்பதாக நீதிபதிகள் கடந்த ஜூலையில் தெரிவித்தனா். அபராதத் தொகையை 4 வாரங்களுக்குள் மல்லையா செலுத்தவில்லை எனில், மேலும் 2 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா். அவா் சிறைத் தண்டனை அனுபவிப்பதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அதுதொடா்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி நிலவரப்படி விஜய் மல்லையா எந்தவித தொகையையும் செலுத்தவில்லை என கடன் வசூல் அதிகாரி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகமும் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கைகளை தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோரைக் கொண்ட அமா்வு திங்கள்கிழமை ஆராயவுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அப்போது முடிவெடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT