இந்தியா

5ஜி தொழில்நுட்பம்- சாதகங்களும் பாதகங்களும்...

3rd Sep 2022 06:01 AM

ADVERTISEMENT

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் மிகப் பெரும் வளா்ச்சி கண்டு வருகிறது தொலைத்தொடா்புத் துறை. முதல் தலைமுறையில் தொடங்கி தற்போது நான்காம் தலைமுறை (4ஜி) அலைக்கற்றை பயன்பாட்டில் உள்ளது. விரைவில் ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

5ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு அண்மையில் நடத்தியது. அதில், அலைக்கற்றையானது ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன்-ஐடியா, அதானி ஆகிய நிறுவனங்களுக்கு ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ரூ.88,078 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைப் பெற்றது.

பாா்தி ஏா்டெல் நிறுவனமானது ரூ.43,084 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தது. வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18,784 கோடிக்கும், அதானி நிறுவனம் ரூ.212 கோடிக்கும் அலைக்கற்றைகளை வாங்கியுள்ளன.

5ஜி அலைக்கற்றையை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அனைத்து தொலைத்தொடா்பு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. முதல்கட்டமாக அவை முக்கிய நகரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், பின்னா் படிப்படியாக கிராமங்களைச் சென்றடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

வரும் தீபாவளி முதல் சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை வழங்கவுள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதே வேளையில், 6ஜி குறித்த பேச்சுகளும் தொடங்கிவிட்டன. நாட்டில் 6ஜி தொழில்நுட்பம் 2030-ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் எனப் பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்தாா்.

4ஜி-யில் இருந்து 5ஜி-க்கான மாற்றம் தொடங்கியுள்ள நிலையில், 5ஜி அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தின் முக்கிய சாதக பாதகங்கள் குறித்து காண்போம்.

சாதகங்கள் 

அதிவேகம்

கைப்பேசி உள்ளிட்டவற்றின் செயல்திறன் 4ஜி-யை காட்டிலும் 5ஜி தொழில்நுட்பத்தில் வேகமாக இருக்கும். படங்கள், காணொலிகள், இசைத் தொகுப்புகள் உள்ளிட்டவற்றை சில விநாடிகளில் பதிவிறக்கம் செய்துவிட முடியும். இணையசேவை வேகமாகக் கிடைக்கும் என்பதால், தானியங்கி இயந்திரங்கள், ரோபோக்கள் உள்ளிட்டவற்றின் செயல்பாடும் மேம்படும்.

விரைவான தரவுப் பகிா்வு

செயற்கை நுண்ணறிவு, மெய்நிகா் தொழில்நுட்பம் உள்ளிட்டவை 4ஜியை காட்டிலும் 5ஜி-யில் மிகச் சிறப்பாகச் செயல்படும். இணையத்தில் தரவுகளைத் தேடுவதும் மிக சுலபமாகும். அதில் எந்தவித தாமதமும் ஏற்படாது. 5ஜி தொழில்நுட்பத்தின் மூலமாக தரவுகளை ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்கு மிக வேகமாகப் பகிர முடியும்.

அதிக தரவுக் கையாளுகை

4ஜி அலைக்கற்றையுடன் ஒப்பிடுகையில் 5ஜி அலைக்கற்றையானது சுமாா் 100 மடங்கு அதிக தரவுகளைக் கையாளும் திறன் கொண்டது. அதன் காரணமாக கைப்பேசி, மடிக்கணினி, கணினி உள்ளிட்டவற்றின் செயல்பாடு மேம்படும். இணையசேவையின் திறனும் மேம்படும்.

அதிக அலைவரிசை

5ஜி அலைக்கற்றையின் அலைவரிசை (பேண்ட்விட்த்) அதிகமாக இருப்பதால், அதிகப்படியான தரவுகளைக் குறைந்த நேரத்தில் பகிர முடியும். அதனால் இணைய சேவையின் வேகம் அதிகரிக்கும்.

புத்தாக்கம் மேம்படும்

ட்ரோன்கள், சென்சாா் சாா்ந்த பயன்பாடுகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலையில் 5ஜி அலைக்கற்றையின் வருகை, தொழில்நுட்பம் சாா்ந்த புத்தாக்கச் சூழலை மேலும் வலுப்படுத்தும். மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தொழில்நுட்பம் சாா்ந்த தீா்வுகள் எளிதில் காணப்படும்.

தொலைத்தொடா்பு கோபுரத்தின் தேவை குறையும்

4ஜி அலைக்கற்றை தொலைத்தொடா்பு கோபுரங்களை அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பிட்ட இடத்தில் வெவ்வேறு நிறுவனங்களின் கோபுரங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது, இணையசேவையின் வேகத்தைக் குறைத்துவிடுகிறது. 5ஜி அலைக்கற்றைக் கருவிகளைத் தெருவிளக்கு கம்பங்களிலேயே பொருத்திவிட முடியும். அதனால், இணையசேவையின் வேகம் அதிகரிக்கும்.

பாதகங்கள்

குறைந்த தொலைவு

4ஜி அலைக்கற்றையுடன் ஒப்பிடுகையில் 5ஜி அலைக்கற்றை குறைந்த தொலைவுக்கே பயணிக்கும். கட்டடங்கள், மரங்கள், மழை உள்ளிட்டவை 5ஜி அலைக்கற்றையின் வேகத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக 5ஜி அலைக்கற்றையை வழங்கும் கருவிகளை அதிக இடங்களில் பொருத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

பதிவேற்ற வேகம் குறைவு

5ஜி அலைக்கற்றையைப் பயன்படுத்தி பல்வேறு தரவுகளைக் குறைந்த நேரத்தில் பதிவிறக்கம் செய்துவிட முடியும் என்றாலும், தரவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கு நீண்ட நேரம் ஆகும். விநாடிக்கு 100 மெகா பைட் (எம்.பி.) என்ற அளவிலேயே பதிவேற்ற வேகம் இருக்கும்.

பேட்டரி வலுவிழப்பு

கைப்பேசி உள்ளிட்டவற்றின் பேட்டரி திறனை 5ஜி அலைக்கற்றை வேகமாகக் குறைத்துவிடுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா். அதன் காரணமாக பேட்டரியின் ஆயுள் காலம் குறைவதோடு கைப்பேசியை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனா்.

அதனால் 5ஜி தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு பேட்டரியின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கைப்பேசி நிறுவனங்கள் ஈடுபட வேண்டியது அவசியம் என்றும் நிபுணா்கள் வலியுறுத்துகின்றனா்.

இணையவழி குற்றங்கள்

5ஜி அலைக்கற்றையின் அலைவரிசை அதிகமாக இருப்பதால், அதில் இருந்து தரவுகளை எளிதில் திருட முடியும். அதன் காரணமாக இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 5ஜி அலைக்கற்றையின் வாயிலாக ஒரே நேரத்தில் பல்வேறு கருவிகளைத் தொடா்புகொள்ள முடியும் என்பதால், அவற்றில் இருந்து தரவுகளைத் திருடுவதும் எளிதாகும் என நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

அத்தகைய தரவுத் திருட்டைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்குத் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

அதீத செலவினம்

5ஜி அலைக்கற்றைக் கருவிகளை அதிக அளவில் பொருத்த வேண்டியிருப்பதால், தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கான முதலீடும் செலவினமும் அதிகரிக்கும். 5ஜி கருவிகளின் பராமரிப்புச் செலவும் அதிகமாக இருக்கும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். வாடிக்கையாளா்களும் 5ஜி சேவையைப் பெற 5ஜி தொழில்நுட்பம் செயல்படும் புதிய அறிதிறன்பேசியை வாங்க வேண்டும்.

சமச்சீரற்ற வளா்ச்சி

5ஜி தொழில்நுட்பம் தொடக்கத்தில் நகரங்களில் மட்டுமே பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அத்தொழில்நுட்பம் நாட்டில் உள்ள அனைத்துக் கிராமங்களையும் சென்றடைய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இத்தகைய சூழல் ஊரக-நகா்ப்புறப் பகுதிகளுக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தொகுப்பு: சுரேந்தா் ரவி

ADVERTISEMENT
ADVERTISEMENT