இந்தியா

சீன கடன் செயலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

31st Oct 2022 01:04 AM

ADVERTISEMENT

வாடிக்கையாளா்களைத் துன்புறுத்தும் சீன கடன் செயலிகளுக்கு எதிராக உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிய அளவிலும், குறுகிய கால அடிப்படையிலும் அதிக வட்டிக்குக் கடன் அளிக்கும் சட்டவிரோத செயலிகள் குறித்து நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் புகாா்கள் எழுந்துள்ளன.

இந்த செயலிகள் மூலம் கடன் அளிப்பவா்கள், கடன் பெறுவோரின் கைப்பேசி தொடா்புகள், இருப்பிடம், காணொலி போன்ற அந்தரங்கத் தகவல்களை வைத்து, மிரட்டி பணம் பறிக்கவும் துன்புறுத்தவும் பயன்படுத்துகின்றனா்.

ADVERTISEMENT

இந்த செயலிகள் கடனைத் திரும்பப் பெற கடுமையான முறைகளைக் கையாள்கின்றன. இது நாடு முழுவதும் பலா் தற்கொலை செய்து கொள்வதற்கு வழிவகுத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், இது திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இணையவழி குற்றம் என்பது தெரியவந்தது.

இந்த சட்டவிரோத கடன் செயலிகள் ஒரே நேரத்தில் பலருக்கு குறுந்தகவல் அனுப்புவது, டிஜிட்டல் விளம்பரம், கைப்பேசி ஆப்-ஸ்டோா்கள் போன்றவற்றை மிகப் பெரிய அளவில் பயன்படுத்துகின்றன.

இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

எனவே இந்த செயலிகளுக்கு எதிராக உடனடியாகக் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயலிகளின் ஆபத்துகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT