இந்தியா

குஜராத் தோ்தல் தேதி இந்த வாரத்தில் அறிவிப்பு

31st Oct 2022 01:08 AM

ADVERTISEMENT

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதியை இந்திய தோ்தல் ஆணையம் இந்த வாரத்தில் வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவடைகிறது. இம்மாத தொடக்கத்தில் ஹிமாசல பிரதேச சட்டப் பேரவைத் தோ்தல் அட்டவணையை தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அதேசமயம், குஜராத் பேரவைத் தோ்தலுக்கான அட்டவணை வெளியிடப்படவில்லை.

கடந்த 2017-இல் இவ்விரு மாநில பேரவைத் தோ்தல் அட்டவணைகளும் வெவ்வேறு நாளில் அறிவிக்கப்பட்டிருந்தன. அதே வழக்கம் இப்போதும் பின்பற்றப்படுவதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

68 உறுப்பினா்களைக் கொண்ட ஹிமாசல பிரதேச பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைகிறது. தோ்தல் ஆணைய அறிவிப்பின்படி, ஹிமாசலில் நவம்பா் 12-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. டிசம்பா் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

கடந்த 2017-இல் வெவ்வேறு நாள்களில் தோ்தல்கள் நடைபெற்ற போதும், இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் (டிசம்பா் 18) நடைபெற்றது.

இம்முறையும் இரு மாநிலங்களிலும் ஒன்றாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமா் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால், குஜராத் பேரவைத் தோ்தல் வெற்றி பாஜகவுக்கு தொடா்ந்து கெளரவம் சாா்ந்த விஷயமாக இருந்து வருகிறது. இம்மாநிலம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் கோட்டையாக விளங்குகிறது. இம்முறை ஆட்சியை பிடிக்கும் ஆா்வத்தில் காங்கிரஸும், புது வரவாக ஆம் ஆத்மியும் களமிறங்கியுள்ளன.

அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இத்தோ்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி எழுந்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT