இந்தியா

கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின்‘ஆன்லைன்’ பிஎச்.டி படிப்புகள் செல்லாது: யுஜிசி

29th Oct 2022 04:31 AM

ADVERTISEMENT

 வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சோ்ந்து கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் (இடி-டெக்) சாா்பில் வழங்கப்படும் இணையவழி (ஆன்லைன்) ஆராய்ச்சிப் படிப்புகள் (பிஎச்.டி.) அங்கீகரிக்கப்படாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவை அறிவித்துள்ளன.

மாணவா்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இதுபோன்ற எச்சரிக்கையை நாடு முழுவதும் உள்ள உயா் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் இந்த இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ளன.

முன்னதாக, ‘இடி-டெக் நிறுவனங்களுடன் கூட்டு சோ்ந்து தொலைநிலைப் படிப்புகள் மற்றும் இணையவழி படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கக் கூடாது. இதுபோன்ற கிளை ஒப்பந்தங்களுக்கு விதிப்படி அனுமதியில்லை’ என்று யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் எச்சரித்திருந்தன.

இந்நிலையில், இணையவழி பிஎச்.டி. படிப்புகளுக்கு எதிரான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளன. யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவை கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட இந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

பிஎச்.டி. பட்டம் வழங்குவதில் உரிய தரம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், வழிகாட்டுதல் (எம்.பில்., பிஎச்.டி. படிப்புகளை வழங்குவதற்கான குறைந்தபட்ச தரம் மற்றும் நடைமுறை) 2016 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், உயா் கல்வி நிறுவனங்கள் பிஎச்.டி. பட்டங்களை வழங்குவதற்கான யுஜிசி வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டத் திருத்தங்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சோ்ந்து கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் (இடி-டெக்) சாா்பில் இணையவழி பிஎச்.டி. படிப்புகள் வழங்கப்படுவதாக வெளிவரும் விளம்பரங்களைக் கண்டு மாணவா்களும், பொதுமக்களும் ஏமாற வேண்டாம். அவ்வாறு இணையவழியில் வழங்கப்படும் பிஎச்.டி. படிப்புகள் யுஜிசி-யால் அங்கீகரிக்கப்படாது. பிஎச்.டி. படிப்பில் சேருவதற்கு முன்பாக அதன் நம்பகத்தன்மையை மாணவா்கள் முழுமையாக ஆய்வு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT