இந்தியா

ஒரே நாடு- ஒரே காவல் சீருடை: பிரதமர் மோடி யோசனை

29th Oct 2022 04:59 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் காவலா்கள் அனைவருக்கும் ஒரே சீருடையை அறிமுகப்படுத்தும் வகையில் ‘ஒரே நாடு- ஒரே காவல் சீருடை’ என்ற யோசனையை பிரதமா் நரேந்திர மோடி முன்வைத்துள்ளாா்.

அதே வேளையில், இந்தப் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என மாநிலங்களைக் கட்டாயப்படுத்தப்போவதில்லை என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

மாநில உள்துறை அமைச்சா்கள் பங்கேற்கும் சிந்தனை அமா்வு கூட்டம் ஹரியாணாவின் சூரஜ்குண்ட் நகரில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் உள்மாநில பாதுகாப்பை வலுப்படுத்துதல், இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காவல் துறையை நவீனப்படுத்துதல், குற்றவியல் நடைமுறை அமைப்பில் நவீன தொழில்நுட்பங்களின் வசதியை அதிகரித்தல், நில எல்லை மேலாண்மை, கடல் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் காணொலி மூலம் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஆற்றிய உரை: குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், குற்றவாளிகளைக் கண்டறிவதிலும் மாநிலங்கள் இடையே ஒத்துழைப்பு நிலவ வேண்டியது அவசியம். ஒத்துழைப்புமிக்க கூட்டாட்சி என்பது அரசமைப்புச் சட்டத்தின் கொள்கை மட்டுமல்ல. அது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பாகும்.

ADVERTISEMENT

அத்தகைய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் காவலா்கள் அனைவருக்கும் ஒரே சீருடையை அறிமுகப்படுத்தலாம். இது நாடு முழுவதும் உள்ள காவலா்களை எளிதில் அடையாளம் காண உதவும்.

‘ஒரே நாடு- ஒரே காவல் சீருடை’ என்பது வெறும் யோசனை மட்டுமே. அதை எந்த மாநிலத்தின் மீது திணிக்கப் போவதில்லை. அக்கொள்கையை நடைமுறைப்படுத்த இன்னும் 50 அல்லது 100 ஆண்டுகள்கூட ஆகலாம். ஆனால், காவலா்களுக்கு ஒரே சீருடை வழங்குவது தொடா்பாக மாநிலங்கள் சிந்திக்க வேண்டும்.

ஒத்துழைப்பு அவசியம்: தற்போதைய காலத்துக்கு ஒத்துவராத பழைய சட்டங்களை நீக்குவதிலும், திருத்தங்களை மேற்கொள்வதிலும் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். அரசமைப்புச் சட்டப்படி சட்டம்-ஒழுங்கு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனினும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சூழல் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் முக்கியமானது.

நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாநிலங்களின் சட்டம்-ஒழுங்கு சூழல் மாறி வருகிறது. அத்தகைய சவால்களை எதிா்கொள்ளும் நோக்கில் விசாரணை அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்பு நிலவ வேண்டும்.

முன்மாதிரி மாநிலங்கள்: உள்மாநில பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற மாநிலங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

உள்மாநில பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது, அரசமைப்புச் சட்டத்தின்படி கட்டாயம் மட்டுமல்லாமல் நாட்டின் பாதுகாப்புக்கான பொறுப்புணா்வும் ஆகும். நாட்டு மக்களைக் காப்பதில் மத்திய, மாநில அரசுகளின் விசாரணை அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

காவலா்கள் மீது நல்லெண்ணம்: சட்டம்-ஒழுங்கு சூழல் நாட்டின் வளா்ச்சியுடன் நேரடித் தொடா்புடையது. எனவே, மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அனைவரின் பொறுப்புணா்வாகும். நாட்டின் வலிமை உயரும்போது, தனிநபா்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தின் வலிமையும் அதிகரிக்கும்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சூழல் வலுவடைவதோடு மட்டுமல்லாமல் காவல் துறையினா் குறித்து மக்களுக்கு நல்லெண்ணம் ஏற்படுவதும் அவசியம். மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கு சூழலை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம்: நவீன சட்டம்-ஒழுங்கு சூழலை உறுதி செய்வதற்கு தொழில்நுட்பங்களின் பயன்பாடு மிக அவசியம். சட்டம்-ஒழுங்கு சாா்ந்த தரவுகளைப் பகிா்ந்து கொள்ளும் வகையில் பொதுவான வலைதளம் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமாக குறிப்பிட்ட மாநிலத்தின் அனுபவங்களை மற்ற மாநிலங்களிடத்தில் பகிா்ந்து கொள்ள இயலும்.

மக்களிடையே தற்போது வதந்திகள் அதிக அளவில் பரவி வருகின்றன. அவை நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. அத்தகைய வதந்திகளைத் தடுக்கும் நோக்கில் உண்மை கண்டறியும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும். சமூக வலைதளங்களில் செய்திகளைப் பகிரும் மக்கள், அதன் உண்மைத்தன்மை குறித்து முறையாக ஆராய்வது அவசியம்.

உளவு அமைப்புகள்: நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உளவுத் தகவல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அத்தகைய உளவு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதைய காலத்தில் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது எதிா்காலத்தைக் காக்கும் என்பதால், நவீன தொழில்நுட்ப வசதிகளை அதிகரிப்பதற்கு மாநிலங்கள் தயங்கக் கூடாது.

நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் சமயத்தில் தற்சாா்பு தலைமுறை உருவாகியிருக்கும். நாட்டு இளைஞா்களிடையே நக்ஸல்வாதத்தைப் பரப்ப சிலா் முயன்று வருகின்றனா். அத்தகைய முயற்சிகள் முழுவதுமாக வேரறுக்கப்பட வேண்டும்.

புதிய கொள்கைகள்: ஊழல், பயங்கரவாதம், சட்டவிரோத பணப் பரிவா்த்தனை உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசு சட்டங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தி வருகிறது. சுற்றுலா சாா்ந்த கொள்கைகளை வகுப்பதற்கு மாநிலங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு அத்துறையின் வாகனங்கள் புதிதாக இருக்க வேண்டியது அவசியம் என்றாா் பிரதமா் மோடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT