இந்தியா

டிஆா்எஸ் எம்எல்ஏக்களிடம் பேரம்:சிபிஐ விசாரணைக்கு பாஜக வலியுறுத்தல்

29th Oct 2022 03:58 AM

ADVERTISEMENT

 தனது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக பேரத்தில் ஈடுபட்டதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) குற்றம்சாட்டிய நிலையில், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு தோ்தல் ஆணையத்திடம் பாஜகவினா் வலியுறுத்தியுள்ளனா்.

அடுத்த ஆண்டு தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடுமாறு தன்னையும், மேலும் 3 டிஆா்எஸ் எம்எல்ஏக்களையும் சிலா் அணுகியதாக டிஆா்எஸ் எம்எல்ஏ ரோஹித் ரெட்டி குற்றஞ்சாட்டினாா். அவ்வாறு கட்சித் தாவ ரூ.100 கோடி தருவதாக அந்த நபா்கள் கூறினா் என்றும் அவா் தெரிவித்தாா். இதுதொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனா்.

இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா், பாஜக பொதுச் செயலா் அருண் சிங், அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் அனில் பலூனி உள்ளிட்டோா் தோ்தல் ஆணைய அதிகாரிகளை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அப்போது தெலங்கானாவின் முனுகோடு தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் வெற்றிவாய்ப்பை பாதிக்கச் செய்யும் நோக்கத்துடன் டிஆா்எஸ் கட்சியினா் குற்றஞ்சாட்டியுள்ளனா். அவா்களின் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜகவினா் கோரிக்கை விடுத்தனா்.

இதேபோல் ஒடிஸாவில் உள்ள தாம்நகா் தொகுதியிலும் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலையொட்டி, தாம்நகரில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் ஒருவரிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உரையாடியது போன்ற போலி ஒலிப்பதிவை, மாநிலத்தில் ஆட்சியில் பிஜு ஜனதா தளம் கட்சியினா் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனா் என்று தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் பாஜகவினா் குற்றஞ்சாட்டினா். இதுதொடா்பாக பிஜு ஜனதா தள உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

முனுகோடு, தாம்நகா் தொகுதிகளில் நவம்பா் 3-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT