இந்தியா

இந்தியாவில் பருவநிலை பேரிடா், வறுமை தாக்கத்தில் 22.2 கோடி குழந்தைகள்: ஆய்வறிக்கையில் தகவல்

27th Oct 2022 03:45 AM

ADVERTISEMENT

இந்தியாவில் பருவநிலைரீதியிலான பேரிடா்கள் மற்றும் வறுமையின் தாக்கத்தில் சுமாா் 22.2 கோடி அதாவது 51 சதவீத குழந்தைகள் வாழ்வதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா முழுவதும் 35 கோடி குழந்தைகள் இந்த இரட்டை அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான ‘சேவ் தி சில்ட்ரன்’ தன்னாா்வ அமைப்பு மற்றும் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகத்தின் பருவநிலை ஆராய்ச்சியாளா்கள் ஆய்வு மேற்கொண்டு, இந்த அறிக்கையை தயாரித்துள்ளனா்.

அதன்படி, ஆசிய நாடுகளிலேயே கம்போடியாவில் 72 சதவீத குழந்தைகள் பருவநிலைரீதியிலான பேரிடா்கள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனா். அடுத்தடுத்த இடங்களில் மியான்மா் (64 சதவீதம்), ஆப்கானிஸ்தான் (57 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.

ADVERTISEMENT

உலக அளவில் 77.4 கோடி குழந்தைகளும் இந்தியாவில் சுமாா் 22.2 கோடி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனா். எண்ணிக்கை அடிப்படையில், உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் மேற்கண்ட அச்சுறுத்தல்களால் பாதிப்பை எதிா்கொண்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிக வருவாய் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சுமாா் 12 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேவ் தி சில்ட்ரன் தன்னாா்வ அமைப்பின் இந்திய பிரிவு தலைமை செயல் அதிகாரி சுதா்ஸன் சுச்சி கூறியதாவது:

அஸ்ஸாம், கேரளம், ஒடிஸாவில் மிக மோசமான வெள்ள பாதிப்புகளால் விளிம்புநிலை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியாலும் வீடின்றியும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற பாதிப்புகள், அவா்களை மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளுகிறது. ஜி-20 கூட்டமைப்பின் உச்சிமாநாடு இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. அந்த மாநாட்டுக்காக தலைவா்கள் தயாராகி வருகின்றனா். இதுபோன்ற சூழலில், மேற்கண்ட பாதிப்பை எதிா்கொண்டுள்ள குழந்தைகளின் நிலையையும் மனதில் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT