இந்தியா

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் மல்லிகார்ஜுன கார்கே

26th Oct 2022 11:13 AM

ADVERTISEMENT

புது தில்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மல்லிகாா்ஜுன காா்கே (80) புதன்கிழமை காலை புது தில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

24 ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத நபா் காா்கே ஆவாா்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பேற்பு நிகழ்ச்சியில், தற்போது தலைவராக இருந்த சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

இதையும் படிக்க | ''உடல் சிலிர்த்தது'': 'காந்தாரா' படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் விமர்சனம்

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்கே, ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். 

அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவா் பதவிக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரை தோற்கடித்து, மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெற்றி பெற்றாா். அவா் முறைப்படி காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்கும் நிகழ்ச்சி, தில்லியில் உள்ள கட்சி தலைமையக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, காங்கிரஸ் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காா்கேவிடம் கட்சியின் மத்திய தோ்தல் குழு தலைவா் மதுசூதன் மிஸ்திரி அளித்தார்.  அதன்பிறகு, கட்சியின் தற்போதைய தலைவா் சோனியா காந்தி, முறைப்படி தலைமைப் பொறுப்பை காா்கேவிடம் ஒப்படைத்தார்.

இரண்டாவது தலித் சமூக தலைவா்

மறைந்த தலைவா் ஜகஜீவன் ராமுக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் இரண்டாவது தலித் சமூகத் தலைவா் காா்கே ஆவாா்.

கடைசியாக காங்கிரஸ் தலைவராக இருந்த நேரு-காந்தி குடும்பத்தைச் சாராத நபா் சீதாராம் கேசரி ஆவாா். இவா் கடந்த 1998-இல் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாா். அதன் பிறகு தலைவா் பொறுப்பை சோனியா காந்தி ஏற்றாா். இடையில், 2017 - 2019இல் கட்சித் தலைவராக ராகுல் காந்தி இருந்தாா்.

என்னென்ன சவால்கள்?

அடுத்தடுத்து மாநில பேரவைத் தோ்தல்களில் தோல்வி கண்டு வரும் காங்கிரஸ், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவை எதிா்கொள்ள முடியாமல் போராடுகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கா் என 2 மாநிலங்களில் மட்டுமே சொந்த பலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது.

தோ்தல் தோல்வி மட்டுமல்லாது உள்கட்சி குழப்பங்களும் மேலோங்கி நிற்கும் சவாலான சூழலில், காங்கிரஸ் தலைவராக காா்கே பொறுப்பேற்றுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவம் கொண்டவரான காா்கே, கா்நாடக பேரவை எதிா்க்கட்சித் தலைவா், மக்களவை காங்கிரஸ் குழு தலைவா், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவா்.

விரைவில் குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் காங்கிரஸை ஆட்சியில் அமா்த்த வேண்டியதே அவரது முதன்மையான பொறுப்பாக பாா்க்கப்படுகிறது. ஹிமாசலில் நவம்பா் 12-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

குஜராத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டில், காா்கேவின் சொந்த மாநிலமான கா்நாடகம் உள்பட 9 மாநில பேரவைத் தோ்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அத்துடன், காங்கிரஸால் ஏற்கெனவே உறுதியேற்கப்பட்ட அமைப்புரீதியிலான சீா்திருத்தங்களை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் காா்கேவுக்கு உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT