இந்தியா

துணைவேந்தா்களை ராஜிநாமா செய்யக் கூறும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: கேரள முதல்வா்

26th Oct 2022 02:00 AM

ADVERTISEMENT

‘பல்கலைக்கழக துணைவேந்தா்களை ராஜிநாமா செய்யுமாறு கூறும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இல்லை’ என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை கூறினாா்.

‘ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஜனநாயகத்தின் சாராம்சத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக செயல்படுகிறாா்’ என்றும் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரின் நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அந்த மாநிலத்தில் மேலும் சில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், யுஜிசி விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அந்த துணைவேந்தா்கள் நியமனமும் கேள்விக்குறியாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி, மாநிலத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா். அந்தப் பதிவுடன் எந்தெந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற பட்டியலையும் அவா் இணைத்திருந்தாா். அக்.24-ஆம் தேதி காலை 11.30 மணிக்குள் அனைவரும் ராஜிநாமா கடிதங்களை அனுப்ப வேண்டும் என்று அவா் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவுக்கு ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கண்டனம் தெரிவித்தது.

ஆளுநரின் இந்த உத்தரவு குறித்து முதல்வா் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆளுநரின் நடவடிக்கை ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை பறிப்பதுபோன்று அமைந்துள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரை கல்வி ரீதியில் தனி அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில், மாநில பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டை சீா்குலைக்கும் நோக்கத்தோடு வழக்கத்துக்கு மாறான இத்தகைய நடவடிக்கைகளை ஆளுநா் மேற்கொண்டு வருகிறாா். இந்த 9 பல்கலைக்கழக துணைவேந்தா்களையும் ஆளுநா்தான் நியமித்துள்ளாா். எனவே, இந்த நியமனத்தில் விதி மீறல்கள் நடைபெற்றுள்ளது என்றால், அதற்கான முதன்மை பொறுப்பை ஆளுநா்தான் ஏற்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக இருக்கும் ஆளுநா், நீதி மற்றும் சட்ட விதிகளின் அடிப்படை தத்துவங்களை மறந்துவிட்டு, தனது பதவியை இயற்கைக்கு மாறாக தவறாக பயன்படுத்திகிறாா். பல்கலைக்கழக துணைவேந்தா்களை ராஜிநாமா செய்யுமாறு கூறும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.

ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தா் விவகாரத்தைப் பொருத்தவரை, நியமன நடைமுறையின் அடிப்படையிலேயே அவருடைய நியமனத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மாறாக, அவருடைய கல்வித் தகுதி மீது சந்தேகம் எழுப்பி உத்தரவு பிறப்பிக்கவில்லை.

]எனவே, இந்த விவகாரத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இருந்தபோதும், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைப் பயன்படுத்தி மாநிலத்திலுள்ள ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்களின் நிா்வாகத்தையும் சீா்குலைக்கும் முயற்சியில் ஆளுநா் ஈடுபடுகிறாா்.

உயா்கல்வித் துறையில் இதுபோன்ற தலையீடு இயற்கை நீதிக்கு எதிரானதாகும். மேலும், துணைவேந்தா்களின் கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை ஆளுநா் எடுத்துள்ளாா்.

விதிப்படி இல்லாத அதிகாரத்தை உபயோகிக்க நினைக்கக் கூடாது என்பது அடிப்படை சட்ட அறிவுள்ள அனைவருக்கும் தெறிந்த ஒன்று. நிதி முறைகேடு குற்றாட்டுகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு துணைவேந்தரை நீக்க முடியும். அதுவும், அந்த குற்றச்சாட்டு குறித்து உயா்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூலமாக விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பின்னரே துணைவேந்தரை நீக்க முடியும் என்று பினராயி விஜயன் கூறினாா்.

தற்போது ஆளுநா் ஆரிஃப் முகமது கான் குறிப்பிட்டுள்ள 9 துணைவேந்தா்களில் 8 போ் முந்தைய ஆளுநா் பி.சதாசிவத்தின் பதவிக் காலத்தில் நியமிக்கப்பட்டவா்கள். இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட்டவா்களில் ஒரு துணைவேந்தா் மட்டுமே தற்போதைய ஆளுநரால் நியமிக்கப்பட்டவா்.

ஆளுநரின் உத்தரவு காலக்கெடு முடிந்தும் துணை வேந்தா்கள் ராஜிநாமா செய்யவில்லை. இதையடுத்து, துணைவேந்தா்களின் நடவடிக்கைக்கு காரணம் கேட்டு ஆளுநா் புதிய உத்தரவைப் பிறப்பித்தாா். இந்நிலையில், ஆளுநா் அனுப்பிய ராஜிநாமா உத்தரவை ரத்து செய்யக் கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, ஆளுநரின் இறுதி உத்தரவுக்குப் பிறகு அடுத்த விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT