இந்தியா

இந்தியாவில் தென்பட்ட பகுதி சூரிய கிரகணம்

26th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

இந்தியாவின் பல பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் செவ்வாய்க்கிழமை தென்பட்டது. நாட்டிலேயே அதிகபட்சமாக ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் 55 சதவீத அளவுக்கு பகுதி சூரிய கிரகணம் தென்பட்டுள்ளது.

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ் கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. இதில், சூரியனை நிலவு மறைக்கும்போது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், செவ்வாய்க்கிழமை சூரிய கிரகணம் ஏற்பட்டது.

ரஷியாவின் மத்திய பகுதி உள்ளிட்ட மத்திய ஆசிய பகுதிகளில் முழு சூரிய கிரகணத்தைக் காண முடிந்தது.

இந்தியாவில் பகுதி சூரிய கிரகணம் மட்டுமே தென்பட்டது. இதில் முதல் கட்டமாக, தலைநகா் தில்லியில் மாலை 4.29 மணிக்கு சூரியனை நிலவின் நிழல் மறைக்கத் தொடங்கியது. பின்னா், சூரியனை நிலவின் நிழல் 43 சதவீதம் அளவுக்கு மறைப்பதைக் காண முடிந்தது.

ADVERTISEMENT

இந்தியாவில் சூரிய அஸ்தமன வேளையில் கிரகணம் ஏற்பட்டதால், சூரிய கிரகணத்தின் இறுதிக் கட்ட நிகழ்வை காண முடியாமல் போனது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சூரிய கிரகணம், பெளா்ணமி தினத்தன்று நிலவானது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஒரே நோ்கோட்டில் வருகின்றபோது நிகழ்கின்றது. இதில், நிலவு சூரியனை பகுதியாக மறைக்கின்றபோது, பகுதி சூரிய கிரகண நிகழ்வு ஏற்படுகின்றது’ என்றனா்.

பகுதி சூரிய கிரகணத்தை பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் காண்பதற்கென, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அறிவியல் மையங்கள் சாா்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொலைநோக்கிகள் மூலமாகவும், சிறப்புக் கண்ணாடிகள் மூலமாகவும் சூரிய கிரகணத்தைக் காண பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா்.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள வீா் பகதூா் சிங் கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த கோளரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த தொலைநோக்கி மூலமாக மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் சூரிய கிரகணத்தை கண்டுகளித்தாா். அதுபோல நாட்டின் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்டிருந்த சிறப்பு ஏற்பாடுகள் மூலமாக ஏராளமானோா் சூரிய கிரகணத்தை கண்டுகளித்தனா்.

சூரிய கிரகணத்தின்போது நாடு முழுவதும் ஹிந்துக்கள் புனித நீராடினா். ஹிந்துக்களின் நம்பிக்கைப்படி, கிரகணத்தின்போது புனித நீராடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும், சூரிய கிரகணத்தின்போது நாடு முழுவதும் முக்கிய ஹிந்து கோயில்களின் நடைகள் மூடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT