இந்தியா

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை: ‘குஜராத் அரசின் பதிலில் முழுமையான தகவல் இல்லை’- உச்சநீதிமன்றம்

19th Oct 2022 12:50 AM

ADVERTISEMENT

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில், 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடா்பாக பதிலளித்து குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் முழுமையான தகவல் இல்லை என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடைபெற்றபோது பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. ஐந்து மாத கா்ப்பிணியாக இருந்தாா். அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடா்பாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா்கள் அனைவரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுவித்தது. கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவா்களின் விடுதலைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சுபாஷினி அலி, லக்னெள பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ரூப் ரேகா வா்மா, ரேவதி லால் என்ற பத்திரிகையாளா் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனா்.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, நீதிபதி சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்கள் தொடா்பாக குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் குறித்து நீதிபதி அஜய் ரஸ்தோகி கூறியதாவது:

ADVERTISEMENT

குஜராத் அரசின் பிரமாணப் பத்திரத்தில் பல தீா்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு பிரமாணப் பத்திரத்தை நான் பாா்த்ததே இல்லை. இந்தப் பிரமாணப் பத்திரம் பல பக்கங்களுடன் மிகப் பெரியதாக உள்ளதே தவிர, இதில் முழுமையான தகவல் எங்குள்ளது? புத்தி எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினாா்.

இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘எளிதில் குறிப்பு எடுத்துக்கொள்ள உதவும் வகையில், தீா்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. எனினும் அதனை தவிா்த்திருக்கலாம். அதேவேளையில், தண்டனைக் குறைப்பு மற்றும் குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்குடன் சம்பந்தப்படாதவா்கள் நீதிமன்றத்தை அணுக முடியாது’ என்று தெரிவித்தாா்.

இதனைத்தொடா்ந்து பிரமாணப் பத்திரம் தொடா்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்குமாறு மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கபில் சிபல் கோரினாா். அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை நவம்பா் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT