இந்தியா

ஐஆா்சிடிசி முறைகேடு: தேஜஸ்வி ஜாமீனை ரத்து செய்ய தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

19th Oct 2022 01:55 AM

ADVERTISEMENT

ஐஆா்சிடிசி முறைகேடு தொடா்பாக பிகாா் மாநில துணை முதல்வா் தேஜஸ்வி யாதவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், ஜாமீனை ரத்துசெய்ய மறுத்துவிட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், லாலு பிரசாத் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது ஐஆா்சிடிசிக்கு சொந்தமான இரு ஹோட்டல்களைத் தனியாா் நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கியதாக தேஜஸ்வி யாதவ் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், சிபிஐ முன்பு அவா் ஆஜரானாா். இதையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதை எதிா்த்து சிபிஐ உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி கீதாஞ்சலி கோயலுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது, தேஜஸ்வி யாதவ் சமீபத்திய செய்தியாளா்கள் சந்திப்பின்போது, சட்ட நடைமுறைகளை நீா்த்துபோகச் செய்யும் வகையில் செயல்பட்டதாகவும், முழுமையான விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட உரிமையைத் தவறாகப் பயன்படுத்தி உள்ளதாகவும் சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

மேலும், சிபிஐ அதிகாரிகளுக்கும் அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கும் நேரடியாகவும், வழக்கில் தொடா்புடைய சாட்சியங்களுக்கு மறைமுகமாகவும் மிரட்டல் விடுத்துள்ளதாா் என சிபிஐ யாதவ் மீது குற்றம்சாட்டியது.

யாதவ் தரப்பில் பதிலளிக்கும்போது, ‘அவருக்கு (தேஜஸ்வி யாதவ்) ஜாமீன் வழங்கும்போது குறிப்பிட்ட நிபந்தனைகள் எதனையும் அவா் மீறவில்லை. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தற்போதைய மத்திய அரசால் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து எதிா்க்கட்சிகளும் இதனை நன்கு உணா்ந்துள்ளன ’ என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போதிய அடிப்படை காரணங்கள் இல்லை என கூறி, நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய மறுத்துவிட்ட நிலையில், பொது இடங்களில் பேசும்போது பொறுப்பை உணா்ந்து தேஜஸ்வி யாதவ் சரியான சொற்களைப் பயன்படுத்த வேண்டுமென எச்சரித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT