நாங்கள் இன்னும் இறந்துவிடவில்லை. இப்போதுதான் எங்களுக்கு 30 வயதாகிறது என்று, கார்ட்டூன் நெட்வொர்க் சேனலுக்காக கண்ணீர்விட்டவர்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறது சேனல் நிர்வாகம்.
கார்டூன் நெட்வொர்க் தொலைக்காட்சி சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் இதே அக்டோபரில் தான் தனது ஒளிபரப்பைத் துவங்கியது. இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதே அக்டோபரில் தனது ஒளிபரப்பை நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதாவது கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் கூறின.
இதையும் படிக்க.. சதிகளுக்கு முக்கிய கருவியாகத் திகழ்ந்தார்: யாரைக் குறிப்பிடுகிறது விசாரணை ஆணையம்
ஆனால் அதனை மறுத்து சேனல் நிர்வாகமே டிவீட் செய்து, கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தவர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
1990 முதல் 2000 வரையிலான காலக்கட்டங்களில் தங்களது சிறார் பருவதைக் கடந்தவர்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருப்பது கார்ட்டூன் நெட்வொர்க். அதில் ஒளிபரப்பாகும் டாம் அண்ட் ஜெர்ரி என்றாலே பலருக்கும் கொள்ளைப்பிரியம்.
பலரது குழந்தைப் பருவத்தை மிகவும் மறக்கமுடியாத நாள்களாக மாற்றியதில் இந்த சேனலுக்கும் மிக முக்கிய இடமுண்டு.
இந்த நிலையில், அந்த சேனல் மூடப்படுவதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. இதனை உண்மை என் நம்பிய மக்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது வருத்தங்களையும் துக்கங்களையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
ஏராளமானோர் மீம்ஸ்களை வெளியிட்டு, இணையம் முழுக்க வைரலாக்கினர். பலர் ஸ்டேட்டஸ் வைத்து கண்ணீர் அஞ்சலி தெரிவித்திருந்தனர்.
ஆனால், ரசிகர்கள் வருத்தம் அடைவது போல, கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்படப்போவதில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இன்னும் சாகவில்லை. இப்போதுதான் எங்களுக்கு 30 வயதாகிறது என்று சேனல் நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த தகவல் பகிரப்பட்ட நாள் அன்றே அதனை சுமார் 2 லட்சம் பேர் லைக் செய்து 29 ஆயிரம் பேர் ரிடிவீட் செய்திருந்தனர். இன்று இது பல மடங்காகியிருக்கிறது.