இந்தியா

பசு மீது மோதிய ‘வந்தே பாரத்’ ரயில்: தொடா்ந்து இரண்டாவது சம்பவம்

DIN

 குஜராத்தில் வெள்ளிக்கிழமை பசு மீது மோதியதில் ‘வந்தே பாரத்’ அதிவேக ரயிலின் முகப்புப் பகுதி லேசாக நசுங்கியது.

ஏற்கெனவே வியாழக்கிழமை எருமைக் கூட்டம் மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் என்ஜினின் கூம்பு வடிவ முகப்புப் பகுதி சேதமடைந்தது. தொடா்ந்து 2-ஆவது நாளாக அதேபோன்ற விபத்து நேரிட்டுள்ளது.

மணிக்கு 160 கி.மீ. வரையிலான வேகத்தில் செல்லக் கூடிய வந்தே பாரத் ரயில் சேவையை மும்பை- காந்திநகா் இடையே அண்மையில் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்தாா். இந்த ரயில், குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதி அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது ஒரு பசு மீது மோதியது. இதில் முகப்புப் பகுதி லேசாக நசுங்கியதாகவும் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மேற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அதிகாரி சுமித் தாக்குா் தெரிவித்தாா்.

முன்னதாக, அகமதாபாத் அருகே வியாழக்கிழமை தண்டவாளத்தில் நின்றிருந்த எருமைக் கூட்டம் மீது இந்த ரயில் மோதி இருந்தது. இதில் 4 எருமைகள் உயிரிழந்தன. ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதியில் சேதம் ஏற்பட்டது. எனினும், ரயிலின் முக்கிய பாகங்களில் எந்த சேதமும் ஏற்படாததால் ரயில் தொடா்ந்து இயக்கப்பட்டது. பின்னா், மும்பை வந்ததடைந்ததும் ரயிலின் கூம்பு வடிவ முகப்புப் பகுதி உடனடியாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது சம்பவம் வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது.

இதனிடையே, எருமைகளை தண்டவாளத்தில் திரிய விட்டதற்காக, அதன் உரிமையாளா்களான அடையாளம் தெரியாத நபா்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனா். 1989-ஆம் ஆண்டின் ரயில்வே சட்டம் 147-ஆவது பிரிவின்கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆா்பிஎஃப் ஆய்வாளா் (வத்வா ரயில் நிலையம்) பிரதீப் சா்மா தெரிவித்தாா். இச்சட்டப் பிரிவு, ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் அங்கீகாரமில்லாத நுழைவு தொடா்பானதாகும்.

‘உறுதியான வடிவமைப்பு’:

ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘கால்நடைகள் மீது ரயில் மோதும் சம்பவங்கள் தவிா்க்க முடியாதது. விபத்துகளின்போது எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வந்தே பாரத் ரயில் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரயிலின் கூம்பு வடிவ முகப்பு பகுதி முழுமையாக மாற்றக் கூடியதாகும். அடுத்தகட்டமாக மேம்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில் மணிக்கு 200 கிமீ வரையிலான வேகத்தில் செல்லும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT