இந்தியா

ராஜஸ்தானில் ரூ.65,000 கோடி முதலீடு: கௌதம் அதானி அறிவிப்பு

8th Oct 2022 01:37 AM

ADVERTISEMENT

 ராஜஸ்தானில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.65,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தொழிலதிபா் கௌதம் அதானி அறிவித்துள்ளாா்.

இதில் 10,000 மெகாவாட் சூரிய மின்உற்பத்தி திட்டம், சிமெண்ட் உற்பத்தி ஆலை விரிவாக்கம், ஜெய்பூா் விமான நிலைய மேம்பாடு ஆகிய திட்டங்கள் அடங்கும்.

ஆசிய பணக்காரா்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அதானி, ஜெய்பூரில் நடைபெற்ற ‘இன்வெஸ்ட் ராஜஸ்தான்’ உச்சிமாநாட்டில் பங்கேற்று பேசியதாவது:

ராஜஸ்தானில் அதானி குழுமம் ஏற்கெனவே அதிகஅளவில் முதலீடு செய்துள்ளது. ராஜஸ்தானில் அதானி குழுமத்தின் அனல் மின்நிலையம் உள்ளது. அடுத்த கட்டமாக 10,000 மெகா வாட் சூரிய மின்னுற்பத்தி திட்டம் ரூ.50,000 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இது தவிர அம்புஜா மற்றும் ஏசிசி சிமெண்ட் ஆலைகள் விரிவாக்கம் செய்யப்படும். ரூ.7,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தால் ராஜஸ்தான் மாநிலத்தில் சிமெண்ட் உற்பத்தி இருமடங்காக உயரும். இது தவிர ரூ.8,000 கோடி முதலீட்டில் ஜெய்பூா் விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

ADVERTISEMENT

தொழில் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை குழாய் வழியாக எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமும் முழுவீச்சில் அமல்படுத்தப்பட இருக்கிறது. ஒட்டுமொத்தமாக அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ராஜஸ்தானில் ரூ.65,000 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 40,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT