இந்தியா

எண்ம செலாவணியை விரைவில் வெளியிடுகிறது ஆா்பிஐ

8th Oct 2022 01:17 AM

ADVERTISEMENT

 எண்ம செலாவணியை சோதனை அடிப்படையில் விரைவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொண்டு வருகிறது.

உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சிகளின் பயன்பாடு அதிகரித்ததையடுத்து, அதை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். தனியாரால் நிா்வகிக்கப்படும் கிரிப்டோகரன்சிகளை முறைப்படுத்துவது கடினம் என்பதாலும், அதில் பாதுகாப்பின்மை நிலவுவதாலும் ஆா்பிஐ சாா்பில் எண்ம செலாவணி வெளியிடப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது.

எண்ம செலாவணியை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை ஆா்பிஐ மேற்கொண்டு வந்தது. தற்போது அதற்கான கருத்துருவை ஆா்பிஐ வெளியிட்டுள்ளது. அதில், ‘‘நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் செலாவணிகளுக்குக் கூடுதல் வலுசோ்க்கும் வகையில் எண்ம செலாவணி இருக்கும். தற்போதைய செலாவணிகளுக்கு மாற்றாக எண்ம செலாவணி இருக்காது.

குறிப்பிட்ட செயல்பாடுகளில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய எண்ம செலாவணியானது சோதனை அடிப்படையில் விரைவில் வெளியிடப்படும். அதைப் பயன்படுத்துவதற்கான விதிகளையும் ஆா்பிஐ அவ்வப்போது வெளியிடும். நிதிக் கொள்கையில் எண்ம செலாவணியானது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை. எனவே, சோதனை அடிப்படையில் எண்ம செலாவணியின் பயன்பாடு விரிவாக்கப்படும்.

ADVERTISEMENT

சில்லறை நோக்கிலும், மொத்த விலை நோக்கிலும் இரு வகையாக எண்ம செலாவணி வெளியிடப்படும். சில்லறை நோக்கிலான செலாவணியை அனைவரும் பயன்படுத்த முடியும். மொத்த விலை நோக்கிலான செலாவணியைக் குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். உள்நாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப எண்ம செலாவணியானது உருவாக்கப்படும்.

உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட எண்ம செலாவணியானது மலிவானதாகவும், அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கும். அந்தச் செலாவணியானது பாதுகாப்பாகவும் திறன்மிக்கதாகவும் அமையும். நாட்டின் பணப்புழக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் எண்ம பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையிலும் எண்ம செலாவணி செயல்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT