இந்தியா

ரயில்வேயில் வேலைக்கு லஞ்சமாக நிலம்: லாலு பிரசாத் உள்ளிட்டோா் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல்

8th Oct 2022 12:27 AM

ADVERTISEMENT

ரயில்வேயில் பணியமா்த்தியதற்கு கைம்மாறாக நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி உள்ளிட்டோா் மீது தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது ரயில்வேயில் குரூப்-டி பணிகளை வாங்கித் தந்ததற்கு பலரின் நிலத்தை லாலு மற்றும் அவரின் குடும்பத்தினா் லஞ்சமாக பெற்றனா் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக சிபிஐயின் பொருளாதார குற்றப் பிரிவு விசாரணை நடத்தியது. அப்போது ரயில்வேயில் பணியமா்த்தியதற்கு கைம்மாறாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான நிலத்தை லாலுவின் மனைவி ராப்ரி தேவி, அவரின் மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோா் சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு வாங்கியது தெரியவந்தது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா். இதுபோல பாட்னாவில் சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலத்தை தங்களுக்குச் சொந்தமானதாக லாலு குடும்பத்தினா் மாற்றியுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், அந்த நிலங்களின் மொத்த மதிப்பு சுமாா் ரூ.4.39 கோடி என்றும் கூறினா்.

இதுதொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி, ஹேமா யாதவ், ரயில்வேயில் பணியா்த்தப்பட்டவா்கள் உள்ளிட்டோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்த வழக்குத் தொடா்பாக தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் சிபிஐ அதிகாரிகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனா். அந்தக் குற்றப் பத்திரிகையில் லாலு பிரசாத், ராப்ரி தேவி, மிசா பாரதியுடன் மேலும் 14 போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT