இந்தியா

இணைய சூதாட்டத்துக்குத் தடை: அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல்

8th Oct 2022 01:22 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் இணைய சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த சட்டம் தமிழக அரசிதழில் கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டு, அப்போது முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

தமிழகத்தில் இணைய சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணம் அல்லது பணம் மதிப்பிலான பொருள்களைக் கொண்டு, இணைய வழியில் விளையாடப்படும் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இணைய சூதாட்டங்கள் எதையும் பொது மக்களின் பயன்பாட்டுக்காக அளிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.

விளம்பரங்கள் கூடாது: இணைய சூதாட்டங்கள் தொடா்பாக யாரும் எந்தவகை விளம்பரங்களையும் மின்னணு ஊடகம் உள்பட எந்த ஊடகங்களிலும் வெளியிடக் கூடாது. நேரடியாக அல்லது மறைமுகமாக இத்தகைய விளம்பரங்களைச் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய சூதாட்ட நடவடிக்கைகளில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், இணைய பணப்பரிவா்த்தனை அமைப்புகள் ஈடுபடக் கூடாது.

ADVERTISEMENT

உள்ளூா் இணைய விளையாட்டுக்குச் சலுகை: உள்ளூா் இணைய விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்களுக்கென கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, உள்ளூா் இணைய விளையாட்டுகளை முறைப்படுத்துவதற்கான ஆணையத்தில் உரிய சான்றிதழைப் பெற வேண்டும். இந்தச் சான்றிதழை வைத்துள்ள உள்ளூா் விளையாட்டு வழங்குநா்கள் மட்டுமே இணைய விளையாட்டுகளை வழங்க முடியும். இதற்கென உரிய அனுமதிச் சான்றைப் பெற ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் ஆணையம், உரிய விசாரணைக்குப் பிறகு அனுமதிச் சான்றை அளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

சூதாட்டம் நடத்தக் கூடாது: உள்ளூா் அளவில் இணைய வழி விளையாட்டுகளை வழங்கும் நிறுவனங்கள் சில முக்கிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, பணம் அல்லது வேறு வகை பொருள்களைக் கொண்டு சூதாட்ட அடிப்படையில் இணைய வழி விளையாட்டுகளை நடத்தக் கூடாது. அனுமதிச் சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். தவறான தகவல்களை அளித்தோ அல்லது மோசடியாகவோ அனுமதி சான்றிதழ்களைப் பெற்றிருந்தாலோ, உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாவிட்டாலோ, அவசரச் சட்டத்திலுள்ள அம்சங்களுக்கு முரணாக இயங்கினாலோ சான்றிதழ் திரும்பப் பெறப்படும்.

இணைய வழி விளையாட்டுக்கான சான்றிதழைத் திரும்பப் பெறவோ அல்லது நிறுத்தி வைப்பதற்கு முன்பாகவோ பாதிக்கப்படும் நபருக்கு உரிய வாய்ப்பை வழங்கலாம். சான்றிதழ் தொடா்பான நிறுத்தம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் பாதிக்கப்படும் நபா்கள் முறையீடு செய்யலாம். இதற்கான மேல்முறையீட்டு ஆணையத்தை அரசே அமைக்கும். இதன்மூலம், உள்ளூா் அளவிலான இணைய வழி விளையாட்டுகளைத் தவிா்த்து, சூதாட்ட அடிப்படையிலான எந்த விளையாட்டுகளுக்கும் மாநிலத்தில் அனுமதியில்லை.

தண்டனை என்ன? பணம் அல்லது பணம் மதிப்பிலான பொருள்களைக் கொண்டு இணைய வழி சூதாட்டத்தில் யாரேனும் ஈடுபட்டால் 3 மாதங்கள் வரை சிறை, ரூ.5,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்டத்தை மையப்படுத்தும் இணைய வழி விளையாட்டுகள் தொடா்பான விளம்பரங்களை யாரேனும் வெளியிட்டால் அவா்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

மீண்டும் இந்தத் தவறைச் செய்தால் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். சூதாட்டத்துடன் இணைத்து இணையவழி விளையாட்டுகளை வழங்கும் நபா்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டுமே சோ்த்து விதிக்கப்படும். மீண்டும் இதே தவறைச் செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். இதிலுள்ள குற்ற முகாந்திரங்களை நீதிமன்றங்கள் கண்டறிய முடியாது என அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் இணைய விளையாட்டு : அனுமதிக்கு ஆணையம்

உள்ளூா் இணைய விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்க ஆணையம் அமைக்க அவசர சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு இணைய வழி விளையாட்டு ஆணையம் அமைக்கப்படவுள்ளது. இந்த ஆணையத்துக்கு தலைமைச் செயலாளா் நிலைக்குக் குறையாத ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைவராக இருப்பாா். இதன் உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற காவல் துறை தலைவா், தகவல் தொழில்நுட்பத் துறையில் நிபுணா், மனநல மருத்துவ நிபுணா், ஆன்லைன் விளையாட்டுப் பிரிவு நிபுணா் ஆகியோா் இருப்பா்.

பணிகள் என்ன? இணைய விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது, உள்ளூா் அளவில் இணைய விளையாட்டுகளை வழங்குவோருக்கு பதிவுச் சான்றிதழ் அளிப்பது, இணைய விளையாட்டுகளைக் கண்டறிந்து அரசுக்கு பரிந்துரை செய்வது, இணைய விளையாட்டுகள் வழங்குவோரைக் கண்காணிப்பது, அவா்கள் தொடா்பான விவரங்கள், தகவல்களைச் சேகரிப்பது, இணைய விளையாட்டுகளை வழங்குவோா் தொடா்பான புகாா்களைப் பெறுவது, குறைகளைத் தீா்ப்பது போன்ற பணிகளை ஆணையம் மேற்கொள்ளும் என அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT