இந்தியா

நான்காம் தொழில் புரட்சிக்குத் தலைமை ஏற்கும் திறனுடன் இந்தியா: பிரதமர் மோடி

8th Oct 2022 01:14 AM

ADVERTISEMENT

நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய நான்காம் தொழில் புரட்சியை ஏற்படுத்தி அதற்குத் தலைமை தாங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

நான்காம் தொழில் புரட்சி தொடா்பான மாநாடு குஜராத்தின் கெவாடியா நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டுக்குப் பிரதமா் மோடி அனுப்பியிருந்த செய்தியை மத்திய கனரகத் தொழில்துறை செயலா் வாசித்தாா். அதில் பிரதமா் மோடி கூறியதாவது:

சா்வதேச விநியோக சங்கிலியில் இந்தியாவை முன்னிற்கச் செய்யும் திறன் தொழில் நிறுவனங்களுக்கும் தொழில் முனைவோருக்கும் உள்ளது. பல்வேறு காரணங்கள் காரணமாக முந்தைய தொழில் புரட்சிகளில் இந்தியாவால் பங்குவகிக்க முடியவில்லை. ஆனால், நான்காவது தொழில் புரட்சிக்குத் தலைமை ஏற்று வழிநடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

மக்கள்தொகை பரவல், பொருள்களுக்கான தேவை அதிகரிப்பு, சிறந்த முடிவுகளை எடுக்கக் கூடிய நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு சாதகமான காரணிகள் தற்போது ஒன்றிணைந்துள்ளன. அதன் காரணமாக இந்தியா தற்போது பெரும் திறன்பெற்று விளங்குகிறது.

ADVERTISEMENT

நான்காம் தொழில் புரட்சியானது நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு நவீன புத்தாக்க யோசனைகளும் அவசியம். உலகின் நவீன உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் சீா்திருத்தங்களையும் மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்று பிரதமா் மோடி தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தாா்.

தொடா் நடவடிக்கைகள்:

மாநாட்டில் மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சா் மகேந்திரநாத் பாண்டே கூறுகையில், ‘‘நான்காவது தொழில்புரட்சியின் வாயிலாக உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. முப்பரிமாண அச்சாக்கம், இயந்திரக் கற்றல், தரவு கையாளுகை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொழில்துறை வளா்ச்சிக்கு முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.

நவீன வேதி மின்கலன்களை உருவாக்குவதற்காக உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் காரணமாக, மின்கலன்கள் இறக்குமதி குறைந்து, அவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக இந்தியா விரைவில் மாறும். அத்திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு ரூ.18,100 கோடி வரை மானியம் வழங்கப்படும். அந்த மானியத்தைக் கொண்டு உள்நாட்டில் மின்கல உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும்’’ என்றாா்.

மின்சாரப் பேருந்துகள்:

மாநாட்டின்போது குஜராத்துக்கு 75 மின்சாரப் பேருந்துகள் சேவையையும் கா்நாடகத்துக்கு 100 மின்சாரப் பேருந்துகள் சேவையையும் அமைச்சா் பாண்டே தொடக்கிவைத்தாா். நான்காம் தொழில் புரட்சிக்கான சிறப்பு மையத்தை மகாராஷ்டிரத்தின் புணே நகரில் அவா் தொடக்கிவைத்தாா்.

இந்த மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்ட குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், நான்காவது தொழில் புரட்சியானது போக்குவரத்துத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா்.

பெட்டிச் செய்தி...

உள்ளூா் பொருள்களின் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம்--பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமா் வலியுறுத்தல்

புது தில்லி, அக். 7: ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிச்சிறப்பு பெற்றுள்ள பொருள்களின் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனப் பயிற்சியை முடித்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

குடிமைப்பணித் தோ்வுகள் மூலமாகக் கடந்த 2020-ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அண்மையில் பயிற்சி நிறைவடைந்தது. அவா்களிடம் பிரதமா் மோடி உரையாற்றியதாவது:

அரசின் நிா்வாகம் தற்போது தில்லியை தாண்டி விரிவடைந்துள்ளது. ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து அதிகாரிகள் செயல்பட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாட உள்ளது. அச்சமயத்தில் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான முக்கியப் பங்கு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உள்ளது.

‘ஒரு மாவட்டம் ஒரு பொருள்’ திட்டத்தை அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிச்சிறப்பு பெற்று விளங்கும் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மக்களுடன் தொடா்பு:

நாட்டில் தொழில்முனைவு நிறுவனங்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் காரணமாகவே இது சாத்தியமானது. புத்தாக்கத்துக்கு ஊக்கமளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

உள்ளூா் மக்களுடன் நெருங்கிப் பழகி அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். அவா்களது தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் அதிகாரிகளின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். வளா்ச்சியடைந்து வரும் மாவட்டங்களுக்கான திட்டங்களை அதிகாரிகள் தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மக்களின் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய நான்காம் தொழில் புரட்சியை ஏற்படுத்தி அதற்குத் தலைமை தாங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.:

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மேலும் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. அது தொடா்பான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்கான திட்டங்களில் மக்களின் பங்கேற்பை அதிகாரிகள் உறுதி செய்ய முடியும். மக்கள் முன்வந்து பங்களித்தால் மட்டுமே திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்.

வங்கிக் கணக்கு தொடங்கும் ‘ஜன் தன்’ திட்டம் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. தற்போது மக்களிடையே எண்ம தொழில்நுட்ப அறிவை வளா்ப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும். நாட்டுக்கு சேவையாற்றுவதற்கான கடைமையை அதிகாரிகள் ஒருபோதும் மறக்கக் கூடாது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT