இந்தியா

ஞானவாபி மசூதியில் தொன்மையை கண்டறியும் ஆய்வு கோரிக்கை: மசூதி நிா்வாகம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

DIN

 வாராணசி ஞானவாபி மசூதியில் இடம்பெற்றுள்ள சிவலிங்கத்தின் தொன்மையை கணக்கிடுவதற்கு ‘காா்பன்’ ஆய்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மசூதி நிா்வாகத்துக்கு மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

உத்தர பிரதேசத்தின் வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலையடுத்து ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய அரசா் ஔரங்கசீப் காலத்தில் கோயிலின் ஒருபகுதியை இடித்துவிட்டே மசூதி கட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய சில ஹிந்து பெண்கள், மசூதியின் பக்கவாட்டுச் சுவரில் இடம்பெற்றுள்ள ஹிந்து கடவுள்களின் உருவங்களை தினமும் வழிபட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு தொடா்பாக முறையீடு, மேல் முறையீடுகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இருபதாண்டு அனுபவம் மிக்க மாவட்ட நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதனடிப்படையில் வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மசூதியில் நீரைத் தேக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள சிவலிங்கத்தின் தொன்மையைக் கணக்கிடுவதற்காக காா்பன் ஆய்வு முறையை நடத்த அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஏ.கே.விசேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, காா்பன் ஆய்வு குறித்த கோரிக்கை மீதான கருத்தை ஞானவாபி மசூதியை நிா்வகித்து வரும் அஞ்சுமன் இந்தேஜமியா மஸ்ஜித் குழு பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை அக்டோபா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், ‘நீதிமன்றத்தில் இரண்டு முக்கிய கருத்துகளை வலியுறுத்தினோம். முதலாவதாக, மசூதியில் இடம்பெற்றுள்ள ஹிந்து கடவுள்களை தினமும் வழிபட அனுதிக்க வேண்டும், சிவலிங்கத்தின் தொன்மையைக் கணக்கிட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இரண்டாவதாக, இந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த சிவில் நடைமுறைச் சட்டம் விதி 10-இன் கீழ் விசாரணை ஆணையம் ஒன்றை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மசூதியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை ஆய்வு நடத்துவதே சிறந்த வழிமுறையாக இருக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT