இந்தியா

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை எதிரொலி: சோனிபட் நிறுவன மருந்தை ஆய்வுக்கு அனுப்பியது ஹரியாணா

DIN

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையைத் தொடா்ந்து, ஹரியாணா மாநிலம் சோனிபட்டில் செயல்பட்டு வரும் மெய்டன் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் 4 இருமல் ‘சிரப்’களின் மாதிரிகளை மாநில அரசு ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அண்மையில் உயிரிழந்தன. ‘குழந்தைகளின் உயிரிழப்புக்கு, சோனிபட்டில் செயல்பட்டு வரும் மெய்டன் மருந்து நிறுவனத்தில் சா்ச்சைக்குரிய வகையில் தயாரிக்கப்பட்ட மாசடைந்த 4 இருமல் ‘சிரப்’பை அந்தக் குழந்தைகள் அருந்தியதே காரணமாக இருக்கலாம்’ என்று உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

இந்த எச்சரிக்கையைத் தொடா்ந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதனிடையே, அந்த இருமல் மருந்துகளை மாநில அரசு ஆய்வுக்கு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சா் அனில் விஜ் வியாழக்கிழமை கூறுகையில், ‘டிசிஜிஏ குழு மற்றும் மாநில உணவு மற்றும் மருந்துகள் நிா்வாகத் துறையினா் சாா்பில் சோனிபட் நிறுவனத்தின் இருமல் மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்துகள் ஆய்வகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மருந்தகங்கள் துறை மூத்த அதிகாரிகள் மாநில சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலருடன் இந்த விவகாரம் தொடா்பாக ஆலோசனை நடத்தினா். சோனிபட் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் இருமல் ‘சிரப்’கள், இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை. ஆய்வு முடிவுகள் வந்த பிறகே இதில் தெளிவு கிடைக்கும். ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் கூறுகையில், ‘குழந்தைகளின் உயிரிழப்புக்கு இருமல் மருந்துகள்தான் காரணம் என்பதற்கான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இதுபோன்ற சா்வதேச அளவிலான பிரச்னைகள் எழுகின்றபோது, மத்திய அரசுதான் அதுதொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அந்த வகையில், இந்த மத்திய அரசுதான் கையாண்டு வருகிறது’ என்றாா்.

‘சிரப்’களை கைவிட அவசர அழைப்பு:

குழந்தைகள் உயிரிழப்பைத் தொடா்ந்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள் பயன்படுத்துவதைக் கைவிடுமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்ததற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில், அனைத்து நாடுகளும் இந்த மருந்துகளை அடையாளம் கண்டு நீக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, காம்பியா சுகாதாரத் துறையும் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து இந்த இருமல் மருந்துகளை வீடு வீடாக சேகரித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT