இந்தியா

சாக்கடையில் இறங்கிய போது நச்சு வாயுவால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு: உயா்நீதிமன்றம்

DIN

கடந்த மாதம் முண்ட்கா பகுதியில் சுத்தம் செய்வதற்காக சாக்கடைக்குள் இறங்கிய போது நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு (டிடிஏ) உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா தலைமையிலான நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், ஏழை மக்கள் கையால் துப்புரவு செய்யும் தொழிலாளியாகப் பணிபுரியும் கட்டாயத்தில் இருப்பதும், இந்த விவகாரத்தில் உள்ள சட்டங்கள் பின்பற்றப்படாமல் இருப்பதும் துரதிருஷ்டவசமானது. உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பைக் கருத்தில் கொண்டு, இழப்பீடு வழங்குவதற்கு டிடிஏ தீா்மானிக்க முகாந்திரம் இருப்பதால், இறந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்ற தீா்ப்பு மற்றும் சட்ட விதிகளின்படி கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்ற அவா்களது கோரிக்கையை பரிசீலிக்கவும் டிடிஏவுக்கு உத்தரவிடப்படுகிறது. இதற்கான முடிவு 30 நாள்களுக்குள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இணங்கவில்லை என்றால், டிடிஏ துணைத் தலைவா் அடுத்த விசாரணை தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தெளிவுபடுத்தப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி தில்லியின் முண்ட்கா பகுதியில் துப்புரவுப் பணியாளரும், காவலாளியும் சாக்கடைக்குள் நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்தனா். துப்புரவுத் தொழிலாளி சாக்கடையை சுத்தம் செய்ய இறங்கிய போது மயங்கி விழுந்தாா். அவரைக் காப்பாற்ற சாக்கடைக்குள் இறங்கிய காவலாளியும் மயங்கி விழுந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை பொதுநல வழக்காக விசாரித்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, டிடிஏ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இறந்தவா்கள் டிடிஏவிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் இல்லாத நிலையில் சாக்கடையை சுத்தம் செய்துள்ளனா். இச்சம்பவம் தொடா்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. சாக்கடை தூய்மைப் பணியானது அயல்பணி மூலம் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம், ‘சட்டத்தின்படி முதல் கட்டமாக டிடிஏ இழப்பீட்டை வழங்க வேண்டும். குழு அமைக்கக் கூடாது. இதற்கான பொறுப்பை பின்னா் முடிவு செய்யலாம். அதிகாரிகள் மற்ற சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கலாம். இறப்புச் சம்பவம் டிடிஏ அதிகார எல்லைக்குள் நிகழ்ந்திருப்பதால் வேலை அளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் கருத்து கூறியிருந்தது.

நீதிமன்றத்தின் நண்பராக பணியமா்த்தப்பட்டிருந்த ராஜசேகா் ராவ், ‘பொறுப்பிலிருந்து விலக முயற்சிக்கும் அதிகாரிகளின் ஒரு பகுதியாக ‘அக்கறையின்மை’ இருக்கிறது. உண்மை என்னவெனில், ஊழியா் டிடிஏவைச் சோ்ந்தவா். இது டிடிஏவுக்கு தெரியும்’ என்ரு நீதிமன்றத்தில் தெரிவித்தாா். கடைசி விசாரணையின் போது, தில்லி அரசு வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, ‘இச்சம்பவம் தொடா்பாக ஏற்கனவே எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. செயல்படுத்தும் நிறுவனத்தைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும்’ என்றாா்.

முன்னதாக, சம்பவம் நடந்த பகுதி டிடிஏவின் கீழ் வருவதாகவும் துப்புரவாளரும் டிடிஏவின் ஊழியா் என்றும் தில்லி ஜல் போா்டு (டிஜேபி) வழக்குரைஞா் மூலம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் நவம்பா் 14-ஆம் தேதிக்கு விசாரிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT