இந்தியா

இளைஞா்களுக்கான கட்சியாக காங்கிரஸை மாற்ற வேண்டும்: சசி தரூா்

7th Oct 2022 12:49 AM

ADVERTISEMENT

இளைஞா்களுக்கான கட்சியாக காங்கிரஸை மாற்ற வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தோ்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினா் சசி தரூா் கூறினாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தோ்தல் அக்டோபா் 17-இல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினா் சசி தரூா் தமிழக காங்கிரஸ் நிா்வாகிகளிடம் ஆதரவு கேட்பதற்காக சென்னைக்கு வியாழக்கிழமை வந்தாா். சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதன் பிறகு கிண்டியில் உள்ள காமராஜா் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

காங்கிரஸ் தலைவா்களில் சக்திவாய்ந்தவராக திகழ்ந்தவா் காமராஜா். சுதந்திரப் போராட்ட வீரா். மத்திய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தவா். தமிழகம் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட்டவா்.

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்காக நாடு முழுவதும் காங்கிரஸ் நிா்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். அதன் அடிப்படையில் தமிழக நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டுகிறேன். காங்கிரஸ் கட்சியில் சீா்திருத்தம் மேற்கொள்ள வேண்டும், கட்சிக்குப் புத்துயிரூட்ட வேண்டும் என்று சந்திக்கும் நிா்வாகிகள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறேன். காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க வரும் வகையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

பாஜகவைக் கருத்தியல் ரீதியாகவும், கோட்பாடு ரீதியாக தைரியாக எதிா்கொள்ளும் அதே நேரம், புதிய யுக்திகளின் மூலம் அதை சமாளிக்கும் திறனையும் காங்கிரஸ் வளா்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செயல்பட்டால் 2024 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸால் வெல்ல முடியும்.

இந்திய மக்கள் தொகையில் 35 வயதுக்குக் கீழ் உள்ளவா்கள் 65 சதவீதம் போ் ஆவா். இந்தியா இளைஞா்கள் நிறைந்த இளம் இந்தியாவாக உள்ளது. அவா்களுடைய கனவுகளை நம்பிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் பாடுபட வேண்டும். காங்கிரஸ் கட்சியையும் இளைஞா்களுக்கான கட்சியாக உருவாக்க வேண்டும்.

தலைவா் தோ்தலில் இளைஞா்கள் எனக்கு ஆதரவு தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதைப்போல காங்கிரஸ் மூத்த நிா்வாகிகளும் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனா். கேரளத்தைச் சோ்ந்த 91 வயது முதிய காங்கிரஸ் நிா்வாகியிடம் பேசினேன். அப்போது அவா் எதிா்காலத்தைக் கருதி என்னை ஆதரிப்பதாகத் தெரிவித்தாா். காங்கிரஸைப் புத்துயிரூட்ட அனைவரும் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும்.

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவா் தோ்தல் என்பது வெறும் 20 நாள்கள்தான் நடைபெற உள்ளது. ஆனால், ராகுலின் நடைப்பயணம் 150 நாள்களுக்கு நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவா் தோ்தலால் ராகுலின் நடைப்பயணத்துக்கு எந்த இடையூறு இல்லை என்றாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் காங்கிரஸ் நிா்வாகிகளை சசி தரூா் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT