இந்தியா

பர்கர் வாங்கிக் கொடுத்தால் பலாத்கார வழக்கு ரத்து: நீதிமன்ற நிபந்தனைக்கு காரணம் இதுதானா?

6th Oct 2022 12:27 PM

ADVERTISEMENT


பலாத்கார வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றால், 2 ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு பர்கர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விதித்த நிபந்தனை பேசுபொருளாகியுள்ளது.

ஏமாற்றுதல், குற்றப் பின்னணி மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், ஒருவரின் முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதையும் படிக்க | ஒன்றாக அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ்; மதுரையில் செங்கல்: பிடிஆர்

இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த நபர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி, நன்கு சுத்தமான இடத்தில் தயாரான பர்கர்களை வாங்கி 100க்கும் மேற்பட்டோர் இருக்கும் தலா 2 ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும், பர்கர் சுத்தமாக நல்ல முறையில் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

ADVERTISEMENT

மேலும், இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் ரூ.4.5 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், இந்த பணம் புகார் தாரரான முன்னாள் மனைவிக்கு வழங்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.

குற்றம்சாட்டப்பட்டவரும், அவரது முன்னாள் மனைவியும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, அப்பெண், பலாத்கார வழக்குத் தொடர்ந்தார்.  ஆனால் இது தம்பதிகளுக்கு இடையேயான பிரச்னையாகவே பார்க்கப்பட்டது.

நீதிமன்றத்தில், இருவரும் சமரசப் பேச்சில் உடன்பட்டு, எந்த மிரட்டலும் இன்றி சுயமாக வழக்கை முடித்துக் கொள்ள முன்வந்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் மீதான முதல் தகவர் அறிக்கையை ரத்து செய்யவும் புகார் அளித்தவர் ஒப்புக் கொண்டார்.

இது தொடர்பாக நீதிபதி குறிப்பிடுகையில், இந்த வழக்கு 2020ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு பதிலாக மிக முக்கிய வழக்கு விசாரணை நடைபெற்றிருக்கலாம். இதனால் நீதிமன்றத்துக்கு கால விரையம்தான் ஏற்பட்டுள்ளது. எப்படியும் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பர்கர் உணவகத்தை நடத்தி வருவதாகக் கூறினார். இதையடுத்தே ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு பர்கர் வழங்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டது. நீதிமன்ற நேர விரயத்துக்கு பதிலாக, ஏதோ ஒரு சமூகச் சேவையாவது கிடைக்குமே என்ற அடிப்படையில்தான் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT