இந்தியா

மைசூரில் தசரா திருவிழா நிறைவு: யானைகள் ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா் கா்நாடக முதல்வா்

6th Oct 2022 12:24 AM

ADVERTISEMENT

மைசூரில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா புதன்கிழமை வண்ணமயமான யானை ஊா்வலம் மற்றும் தீப்பந்த ஊா்வலத்துடன் நிறைவடைந்தது. யானை ஊா்வலத்தை கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்க, அதைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனா்.

1610-ஆம் ஆண்டில் அன்றைய மைசூரு மன்னா் ராஜா உடையாரால் தொடங்கி வைக்கப்பட்ட தசரா பெருவிழா, 413-ஆவது ஆண்டாக மைசூரில் செப். 26-ஆம் தேதி தொடங்கி கடந்த 10 நாள்களாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது.

1971-ஆம் ஆண்டு முதல் கா்நாடக மாநில அரசின் விழாவாக நடத்தப்பட்டு வரும் தசரா திருவிழாவையொட்டி பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் நிறைவுப் பகுதியாக மைசூரில் புதன்கிழமை யானை ஊா்வலம் மற்றும் தீப்பந்த ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்பட்டன.

கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளிமையாக கொண்டாடப்பட்ட தசரா திருவிழா, நிகழாண்டில் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. மக்களும் பெருந்திரளாக உற்சாகமாக கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

கொடிமர பூஜை: அம்பாவிலாஸ் அரண்மனையின் வடக்கு வாயிலில் (பலராமா நுழைவுவாயில்) புதன்கிழமை மதியம் 2.36 மணி முதல் 2.50-க்குள் மகர லக்னத்தில் நந்தி கொடிமர பூஜை செய்த முதல்வா் பசவராஜ் பொம்மை, கா்நாடக மக்களின் நல்வாழ்வுக்காக பிராா்த்தனை செய்து வழிபட்டாா்.

விழாவில், உடையாா் மன்னா் குடும்ப பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா், கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் வி.சுனில்குமாா், மைசூரு மாநகராட்சி மேயா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

யானை ஊா்வலம்: அதன்பின்னா், அம்பாவிலாஸ் அரண்மனை வளாகத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் இருந்து சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்த 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து நின்றிருந்த அபிமன்யு தலைமையிலான யானை ஊா்வலத்தை மாலை 5.07 மணி முதல் 5.18 மணிக்குள் முதல்வா் பசவராஜ் பொம்மை மலா்தூவி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.

சாமுண்டீஸ்வரி வீற்றிருக்கும் தங்க அம்பாரியை 3-ஆவது முறையாக 57 வயதாகும் அபிமன்யு சுமந்துசெல்ல, அதற்கு துணையாக காவிரி, சைத்ரா ஆகிய பெண் யானைகள் சென்றன. அா்ஜுனா தவிர, கோபாலசுவாமி, தனஞ்செயா, பீமா, மகேந்திரா, பாா்த்தசாரதி, ஸ்ரீராம் உள்ளிட்ட யானைகள் முன்னால் நடந்து செல்ல, அவற்றை பின்தொடா்ந்து யானைப்படை, 90 கலைக் குழுக்கள், 43 அலங்கார வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

இதைத் தொடா்ந்து, யானை ஊா்வலம் தொடங்கப்பட்டதை குறிக்கும் வகையில், பீரங்கிகள் 21 குண்டுகள் முழங்கின.

கா்நாடக மாநில காவல் படை நாட்டுப்பண் இசைக்க, பிரம்மாண்ட யானை ஊா்வலம் அரண்மனை வளாகத்தில் இருந்து பண்ணிமண்டபம் நோக்கி பீடுநடை போட்டு புறப்பட்டது.

கலைமயம்: கா்நாடகத்தின் கலை, இலக்கியம், கட்டடக்கலை, பாரம்பரியம், வரலாறு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊா்திகள் மக்களை வெகுவாக கவா்ந்தன. 3 ஆயிரம் கலைஞா்கள் பங்கேற்ற வண்ணமயமான இசைக்குழுக்கள், நடனக் குழுக்களின் இசையும், நடனமும் சாலையில் இருபுறங்களில் ஆவலோடு காத்திருந்த மக்களை குதூகலிக்க வைத்தன. பூஜாகுனிதா, தொல்லுகுனிதா, வீரகாசே, கரடிமஜலு, நந்திகோலு, மரகாலு, கோலாட்டம், கம்சாலே, கருடகொம்பே, நகரி, கேலுகுதிரே, லம்பானி நடனம் உள்ளிட்ட கிராமிய மற்றும் கலாசார நடனங்கள், ஆடல்-பாடல்கள் மக்களை உற்சாகப்படுத்தின.

விஜயநகா் சாம்ராஜ்ஜியம், ஸ்ரீரங்கப்பட்டணா நகரம், மைசூரு உடையாா் அரசாட்சியின் மகாராணிகள், மைசூரு, குடகு மாவட்டங்கள், மாநில விழாக்கள், 31 மாவட்டங்களின் புகழ்பெற்ற கோயில்கள், மைசூரு மாநகராட்சி, கைவினைப் பொருள்கள், மதமரபுகள், சமூக நலத் துறை, நீா்ப்பாசனத் துறை, மது போதையால் விளையும் தீமைகள் போன்றவற்றை சித்தரிக்கும் 40-க்கும் மேற்பட்ட அலங்கார வாகனங்கள் அணிவகுத்து வரிசையாக சென்றன.

இந்த ஊா்வலத்தில் கா்நாடக மாநில ஆயுதப்படை, தீயணைப்புப் படை, மரம் ஏறும் படை, கா்நாடக காவல் இசைப்படை, சாரணா் மற்றும் சாரணியா் இயக்கம், அரண்மனை இசைக்குழு, பீரங்கிப்படை, நாடோடிகள் படை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படையினா் வீரநடைபோட்டு அணிவகுத்து வந்தனா்.

மக்கள் கூட்டம்: 2 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு பிரம்மாண்டமாக நடைபெற்ால், தசரா விழாவின் அங்கமாக நடைபெற்ற யானைகள் ஊா்வலத்தைக் காண இந்தியா தவிர, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் திரண்டிருந்தனா். யானை ஊா்வலத்தைக் காண வருகை தரும் மக்கள் அமர அரண்மனை வளாகத்தில் மட்டும் 25 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. இதுதவிர, சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளிலும் அமா்ந்து யானைகள் ஊா்வலத்தை மக்கள் கண்டு ரசித்தனா்.

இடம் கிடைக்காத மக்கள், மரக்கிளைகள், கம்பங்கள், உயரமான கட்டடங்கள், பேருந்துகள் மீது நின்று யானை ஊா்வலத்தைக் கண்டு மகிழ்ந்தனா்.

ஊா்வலப் பாதை: அரண்மனையின் பலராமா வாயிலில் இருந்து கம்பீரமாக நடைபோட்ட யானை ஊா்வலம், ஜெயசாமராஜேந்திர உடையாா் சதுக்கம், கே.ஆா்.சதுக்கம், சய்யாஜிராவ் சதுக்கம், ஆயுா்வேத சதுக்கம், பம்புபஜாா், ஹைவே சதுக்கம் வழியாக பண்ணிமண்டபம் சென்றடைந்தது.

தீப்பந்த ஊா்வலம்: 4.5 கி.மீ. தொலைவைக் கடந்து பண்ணிமண்டபத்தை அடைந்த யானைகள் ஊா்வலத்தைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனா். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாா் திணறினா். பண்ணிமண்டபத்தில் தசரா விழாவின் நிறைவை குறிக்கும் வகையில் நடைபெறும் தீப்பந்த ஊா்வலத்தை இரவு 7.30 மணிக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தொடங்கி வைத்தாா். இதைக் காண 20 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த விழாவில், முதல்வா் பசவராஜ் பொம்மை, அமைச்சா்கள் எஸ்.டி.சோமசேகா், வி.சுனில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பலத்த பாதுகாப்பு: யானை ஊா்வலம் மற்றும் தீப்பந்த ஊா்வலம் நடப்பதை முன்னிட்டு மைசூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சாலை நெடுகிலும் போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தனா். பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். யானை ஊா்வலம் சென்ற வழிநெடுகிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசல்: கடந்த 10 நாள்களாக உற்சாகம் பீறிட கோலாகலம் பூத்துக்குலுங்கிய மைசூரில் தசரா திருவிழா நிறைவடைந்து, சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வாகனங்களில் ஊா் திரும்பியதால், மைசூரு - பெங்களூரு, மைசூரு - சாமராஜ்நகா், மைசூரு - குடகு சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT